மேலும்

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது எனது கடமை – சிறிலங்கா அதிபர்

maithriதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது தனது பொறுப்பு மாத்திரமல்ல, கடமையும் கூட என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’  ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கடந்த தேர்தலின் போது  எனக்கு வாக்களித்த 90 வீதமான தமிழ் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

அவர்களின் பிரச்சினையை தீர்ப்பது எனது பொறுப்பு மாத்திரமல்ல. கடமையும் கூட.

நல்லிணக்கம் என்பது சில நாட்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல. அரசாங்கத்தை பொறுத்தவரையில் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று அனைவரும்  ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுக்கு பெருமுயற்சியை மேற்கொள்கிறது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை நான்  ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனினும், இந்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதித்துறை நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் விடயத்தில். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அழுத்தங்கள் இல்லை.

நான் பதவியேற்ற பின்னர் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து திருப்தியடைகிறேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள 9000 பில்லியன் ரூபா கடன் பளு என்பனவற்றை தீர்க்க வேண்டியுள்ளது.

எனினும் பதவியை இழந்தவர்கள் எனது நடவடிக்கைகளை, குழப்ப முனைகின்றனர்.

50 ஆண்டு அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் எந்தவொரு சவாலையும் சமாளித்து வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதிபராகப் பதவியேற்ற பின்னர் 11 தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளேன். முன்னர் இருந்த அதிபர்கள் எவரும் அவ்வாறு செல்லவில்லை.

வடக்கைப் பொறுத்தவரையில் 90 வீதமான தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது எனது  கடமையாகும்.

நான் பதவிக்கு வந்தபோது நாட்டின் சட்டம் பலவீனமாக இருந்தது. எனவேதான் பிரதம நீதியரசராக சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரை நியமித்தேன். சிறுபான்மையினர் மத்தியில் நீதிமுறை தொடர்பாக நம்பிக்கையை கட்டியெழுப்புவதே இதன் நோக்காகும்.

சமஷ்டி என்ற சொல் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பாதகமானதாக பார்க்கப்படுகிறது. வடக்கு மக்களை பொறுத்தவரை ஒற்றையாட்சி என்ற சொல் அபாயமானதாக கருதப்படுகிறது.

எனவே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேவையற்ற வாதங்களை விடுத்து விரைவில் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவே முனைகிறோம்.

சிறிலங்காவில் இப்போது புதிய ஒரு அரசியல் சக்தி உருவாவதற்கான சாத்தியங்கள் இல்லை.

இந்தியா – சிறிலங்கா இடையிலான  எட்கா உடன்படிக்கை எந்த நாட்டுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் செயற்படுத்தப்படும்.

இந்தியாவும் சீனாவும் சிறிலங்காவின் நெருங்கிய நண்பர்கள் என்றும் சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *