மேலும்

சீனாவின் கைக்கு மாறும் அம்பாந்தோட்டை – இந்திய இராஜதந்திரத்தின் தோல்வி

india-chinaஅம்பாந்தோட்டையிலுள்ள ஆழ்கடல் துறைமுகத்தை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு விற்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் எட்டப்பட்டுள்ள தீர்மானமானது இந்தியாவிற்கு அதிர்ச்சியை அளித்திருக்க மாட்டாது.

தனது நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கான கலந்துரையாடலை கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த விடயத்தில் தலையீடு செய்வதில் இந்தியா தவறியுள்ளது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிராந்தியக் கோட்பாடுகள் தொடர்பில் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அம்பாந்தோட்டையில் சீனர்களின் நிரந்தரமான முழுமையான ‘பிரசன்னம்’ இருக்க முடியாது எனக் கூறினாலும், இந்த நிலைப்பாடானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பூகோளஅரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்துடன் சீனாவின் இந்திய மாக்கடல் மீதான கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தின் மையமாகவும் அம்பாந்தோட்டை திகழ்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

இதேவேளை, அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள 6100 ஹெக்ரேயர் நிலப்பரப்பை சீன நிறுவனம் ஒன்றுக்கு ‘முதலீட்டு வலயம்’ என்கின்ற பெயரில் நீண்ட காலக் குத்தகைக்கு வழங்குவதற்கான உறுதிப்பாடும் சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் சுறுசுறுப்பான அனைத்துலகக் கடற் பாதைகளில் ஒன்றான –தூரகிழக்கிற்கும்,  ஐரோப்பாவுக்கும் இடையிலான கப்பல் பாதையில் இருந்து பத்து கடல் மைல் தூரத்திலேயே அம்பாந்தோட்டை அமைந்துள்ளது.

இந்தியக் கடற்படையினர் தென்சீனக் கடல் மீதான கண்காணிப்பை மேற்கொள்ளும், வங்காள விரிகுடாவிலுள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க  இரண்டு கடற்படைத் தளங்களான விசாகபட்டினம் மற்றும் அந்தமான் – நிக்கோபார் தீவுகளிலிருந்து 1300 கிலோமீற்றர் தூரத்திலேயே அம்பாந்தோட்டை அமைந்துள்ளது.

அத்துடன், இந்தியா தனது இராணுவச் செய்மதிகளை அனுப்புவதுடன் ஏவுகணைப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் சிறப்பு மிக்க விண்வெளித்தளமான சிறிஹரிகோட்டாவின் தெற்குப் புறமாக 500 கிலோமீற்றர் தூரத்தில் அம்பாந்தோட்டை அமைந்துள்ளது.

Map-Maritime-Silk-Road-China-2

அம்பாந்தோட்டையில் சீனர்களின் பிரசன்னம் அதிகரிக்கும் போது இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க வங்காள விரிகுடா மீதான தனித்துவம் முடிவிற்குக் கொண்டு வரப்படும். இந்திய இராஜதந்திரமானது பாரிய பின்னடைவை எட்டியுள்ளது. பாகிஸ்தானுடனான விரிசல் மற்றும் சீனாவுடனா விரிசல் போன்ற இந்தியாவின் பாதுகாப்பிற்குக் களங்கத்தை ஏற்படுத்தும்.

மோடி அரசாங்கத்தின் ஆலோசரான இந்துத்துவ தேசிய அமைப்பான ராஷ்ரிய சேவக் சங்கமானது (ஆர்.எஸ்.எஸ்) சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கோட்பாடுகள் தொடர்பாக வடிவமைத்துள்ளது. சிறிலங்காவுடன் நட்பைப் பாராட்டுவதன் மூலம் அதனை இந்திய வட்டத்திற்குள் வீழ்த்த முடியும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

பாரம்பரியமாக நிலவும் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதைக் கைவிட்டு,   இந்துத்துவத் தேசியவாதமானது அச்சுறுத்தலாக உள்ளதாக சிங்களவர்கள் கூறுவதால் இதற்குப் பதிலாக ‘மென் சக்தியைப்’ பின்பற்றுமாறும்,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது நரேந்திர மோடியிடம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவில் ஜனவரி 2015ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்தியாவானது சிறிலங்காவுடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப முன்வந்தது. ‘சிறிலங்காவில் ஆட்சிக்கு வந்துள்ள இந்திய ஆதரவு அரசாங்கமானது சீனச் செல்வாக்கை தனது நாட்டிலிருந்து வெளியேற்றும்’ என இந்திய அரசாங்கம் மதிப்பீடு செய்தது.

எனினும், சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இருபது மாதங்கள் கடந்த நிலையில், இந்தியாவின் எதிர்பார்ப்பிற்கு எதிரான சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. சிறிலங்காவானது இந்தியாவின் பதிலிகளாகச் செயற்படும் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குருட்டுத்தனமான நம்பிக்கையானது தவறானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறான கணிப்பீடானது மோடியின் வெளியுறவுக் கோட்பாடு மீது பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது தொடர்பில் கொழும்பு மீது குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் இது பெரும் கடன்சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

மொத்தத் தேசிய வருமானத்தில் 75 சதவீதம் கடனை அடைக்கவும் சிறிலங்கா அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 95 சதவீதமானது கடனை மீளச் செலுத்துவதற்கும் பயன்படுகிறது.

மறுபுறத்தே, சீனாவின் இராஜதந்திரமானது இந்தியாவின் இராஜதந்திரத்தை விஞ்சியுள்ளது. சீனா தனது இராஜதந்திரத்தைப் பலப்படுத்துவதற்கு நிதியைப் பயன்படுத்தும் நிலையில் இந்தியா அதனை ஈடுகொடுக்க முடியாதுள்ளது.

வளர்ந்து வரும் பூகோள சக்தி என்ற வகையில், இந்திய மாக்கடல் மீதான இந்தியாவின் செல்வாக்கால் சீனா தடுமாற மாட்டாது. பிராந்தியத்தை வலுப்படுத்தும் பாரிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது. இதன் பகுதியாக நேபாளம், சிறிலங்கா மற்றும் பங்களாதேசில் சீனா தனது முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திற்கு முதலீடு செய்யுமாறு சீனா, இந்தியாவை அழைத்திருந்தது. சீனாவின் இந்த அழைப்பை இந்தியாவானது தனது நீண்ட கால நோக்கங்களை இலக்காகக் கொண்டு இது ஒரு புலமைசார் சவாலாக ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியா இதில் தனது பூச்சியக் கொள்கையைக் கடைப்பிடித்தது.

அத்துடன் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துடன் இந்தியாவால் ஒத்துழைக்க முடியாது என இந்துத்துவ தேசியவாதிகள் வலியுறுத்திய நிலையிலேயே இது தொடர்பில் இந்தியா அமைதி காத்தது.

தனது அழைப்பிற்கான காரணம் என்ன என்பதை மோடி உற்றுநோக்குவார் என சீனா கணிசமானளவு எதிர்பார்த்தது. ஆனால் மோடி அரசாங்கமானது இதுவரை சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்புதலை வழங்கவில்லை. யூலை மாதம் நேபாளத்தில் சீனாவிற்கு நட்பான பிரதமர் கே.பி.ஒலி பதவியிலிருந்து விலக்கப்பட்ட போதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவில் இந்திய-அமெரிக்கத் தலைமையில் சீன ஆதரவு அதிபர் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட போதும் சீனா இந்த நகர்வுகளை எதிர்க்கவில்லை.

இந்திய இராஜதந்திரமானது ஏன் தனது இயற்கையான நட்பு நாடுகள் தொடர்பான கோட்பாட்டில் குழப்பமுற்றுள்ளது? அடிப்படையில், இந்தியா முன்னொருபோதும் இவ்வாறானதொரு புலமைசார் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவில்லை. சீனாவுடன் உறவை வளர்த்துக் கொள்வதால் எதிர்ப்பைச் சம்பாதிக்கலாம் என இந்தியா கருதுகிறது.

கி.மு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் மாக்கியவல்லியான  சாணக்கியர், என்பவர் 21ம் நூற்றாண்டின் உலக ஒழுங்கு தொடர்பாகவும் இதில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் எதனைக் குறிப்பிட்டிருந்தார் என்பதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி ஆகியோர் கவனத்திற் கொள்வார்களாயின்,  இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் புலமைசார் கருவிகளாக சீனா நிலைபெற்றுள்ளதை அறியமுடியும்.

அடிப்படையில், மோடி அரசாங்கமானது இது தொடர்பான முக்கியத்துவத்தை உணரவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியப் பிரதமர் மோடி, சீனா உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் மொங்கோலியாவின் தலைநகரான உலன்பற்றருக்குப் பயணம் செய்த போது குறைவான வட்டியுடன் ஒரு பில்லியன் டொலரைக் கடனாகத் தருவதாக திடீர் அறிவித்தல் ஒன்றை மேற்கொண்டார்.

ஒரு பில்லியன் டொலர் என்பது சீனாவின் றெட் சிப் நிறுவனமான ‘சீன வர்த்தகத் துறைமுக நிறுவனமானது’ அம்பாந்தோட்டையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க சொத்துக்களை வாங்குவதற்காக செலவிடக் கூடிய அண்ணளவான ஒரு தொகையாகும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மீண்டும், இரண்டு வாரங்களின் முன்னர், கோவாவில் இடம்பெற்ற BRICS உச்சி மாநாட்டின் போது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட BIMSTEC அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்களுடன் இந்தியா பேச்சுக்களை நடத்தியிருந்தது. சிறிலங்கா, பங்களாதேஸ் மற்றும் மியான்மார் ஆகியவற்றை இந்தியாவின் செல்வாக்கிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு உப பிராந்திய அமைப்பாகவே BIMSTEC செயற்படுகிறது.

ஆனால் இந்தியா இந்தச் சந்திப்பை மேற்கொண்டு இரண்டு வாரங்களில், சிறிலங்கா தனது நிலத்தை சீன நிறுவனங்களுக்கு விற்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியாவிற்குக் கிடைத்த இத்தகைய பின்னடைவானது சீன-அமெரிக்க பகைமைக்குள் இந்தியா அகப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு உறுதிப்படுத்தற் காரணியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த நிலைப்பாடானது பனிப்போர்க் காலப்பகுதியில் சீனா எதைச் செய்ததோ அதையே தற்போதும் சீனா கைக்கொள்வதாக ஆர்.எஸ்.எஸ் கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றனர். சீனாவானது அமெரிக்கச் சந்தையை சுரண்டினால் தன்னால் தனது சொந்தப் பொருளாதாரத்தை மறுசீரமைத்து பூகோளமயப்படுத்த முடியும் என இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். இதற்குச் சமமாக, சீனாவானது மனித வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி மறுமலர்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

சீனா 80களில் எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே தற்போதும் செயற்படுவதாக இந்தியா கருதுகிறது. ஆனால் பல பத்தாண்டுகால பொதுவுடமை ஆட்சியின் ஊடாக உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பின் மூலம் சீனா பெருமளவான மனித வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

எல்லைத் தகராறு இடம்பெறும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு வருகை தருமாறு தலாய்லாமாவிற்கு இந்தியா அழைப்பு விடுத்தமை தொடர்பில் இந்தியாவிற்கு சீனா கடந்த வாரம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அத்துடன் இந்த நகர்வானது எல்லைப் பகுதிகளில் நிலவும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் எனவும் இருதரப்பு உறவிலும் விரிசலை ஏற்படுத்தும் எனவும் சீனா எச்சரித்துள்ளதுடன் திபேத் தொடர்புபட்ட விடயங்கள் மீதான இந்தியாவின் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான சூழலில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்னுடைமையாக்குவது தொடர்பில் இந்தியா தீவிர கவனம் கொண்டுள்ளது. கோவாவில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்குப் பயணம் செய்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மோடியைச் சந்தித்து சில நாட்களின் பின்னர் கடந்த வாரம் இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பிற்குப் பயணம் செய்தார்.

இதேபோன்று இவ்வார இறுதியில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவின் தலைநகரான டில்லிக்கு அவசர பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஆகவே சிறிலங்கா அரசாங்கமானது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நீண்ட நாள் குத்தகைக்கு சீனாவிடம் வழங்குவது தொடர்பான தீர்மானம் தற்போது இந்திய அரசியல் வட்டத்திற்குள் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது என்பது உறுதியானதே.

வங்காள விரிகுடாவிற்கு அருகிலுள்ள மூலோபாய முக்கியத்துவம் மிக்க இந்தியாவின் மிகவும் இரகசியமாகப் பேணப்படும் இந்தச் சொத்துக்களை நோக்கி சீனாவானது தனியுரிமைப் படையெடுப்பை மேற்கொண்டுள்ளதானது இந்தியாவிற்கு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

ஆங்கில மூலம்  – M.K. BHADRAKUMAR
வழிமூலம்          – Asia times
மொழியாக்கம்    – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *