மேலும்

தெற்கில் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும் சித்திரிக்கப்படுகிறேன் – விக்கி வருத்தம்

CM-NPCதெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடந்து வந்த 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“பேச்சாளர் பட்டியலில் எனது பெயர் முன்பு இடம் பெற்றிருக்கவில்லை. இறுதி நேரத்தில் என்னையும் பேசுமாறு அழைத்தமைக்கு நன்றி கூறுகின்றேன்.

ஒரு வேளை தெற்கிலே என்னை இப்பொழுது சித்திரித்துக் காட்டி வருவது என்னைத் தகாத ஒரு மனிதனாக ஏற்பாட்டாளர்கள் மனதில் எடுத்துக் காட்டியிருக்கக் கூடும். நான் வழக்கமாக பேச்சுக்களை எழுதியே வாசிப்பேன்.

என்னைப் பேயாகவும் பூதமாகவும் தகாத மனிதப் பிறவியாகவும் சித்திரிப்பதற்கு முன்னர் நான் அண்மையிலே பேசிய பேச்சை சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ முறையாகச் சரிவர மொழிபெயர்த்து வாசித்து விட்டு, என்னை விமர்சித்திருந்தால் அதற்கான பதிலைத் தந்திருக்க முடியும்.

ஆனால் நான் சொல்லாததை எல்லாம் சொல்லி என்னை வைவது மனவருத்தத்தைத் தருகின்றது.

cm-maithri-sampanthan

1958ல் செனவிரத்ன எனும் ஒரு சிங்களச் சகோதரரை வெட்டித் துண்டு துண்டாக்கி மீன் பெட்டிகளில் அடைத்து அனுப்பியதாக ஒரு கட்டுக் கதை கட்டி விடப்பட்டதால்த்தான் பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.

அவ்வாறு அழிக்கப்பட்ட பின்னர்தான் அந்தச் செய்தி பொய் என்று தெரியவந்தது. ஆனால் அழிவு அழிவுதான்.

கடைசி நேரத்தில் என்னைப் பேச அழைத்ததால் அது பற்றிய முழு விபரங்களையும் என்னால்த் திரட்ட முடியவில்லை. தார்சி விதாச்சி என்பவரின்  “58ன் அவசரகாலம்” என்ற நூலில் இது பற்றிய விபரம் அடங்கியுள்ளது.

ஆகவே பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தாது இருப்போமாக!

முக்கியமாக தெற்கில் தேர்தலில் தோற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள்.

அவர்கள் வியாபாரத்துக்காவது நான் அவர்களுக்கு பயன்பட்டுள்ளேன் என்பதில் எனக்குத் திருப்திதான். ” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *