மேலும்

சிறிலங்காவைக் கட்டியெழுப்ப அரசியல் நீதி மட்டும் போதாது

woman-shadow26 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது அரசியல் சார் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியே இடம்பெற்றது. பெரும்பான்மை சிங்கள மக்களால் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக ரீதியான புறக்கணிப்புக்களே அரசியற் பிரச்சினைக்கான மூலகாரணமாக அமைந்தது.

1950களின் மத்தியில் சிங்களம் மட்டுமே நாட்டின் ஒரேயொரு உத்தியோகபூர்வ மொழி எனப் பிரகடனம் செய்யப்பட்டமையே இவ்வாறான ஒரு அரசியல் சார் முரண்பாட்டிற்கான பொறியாக அமைந்திருக்கலாம். ஆனால் பல பத்தாண்டுகளாக நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அனைத்து விடயங்களிலும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டமையே இவ்வாறான ஒரு யுத்தம் தோன்றுவதற்கான காரணமாகும்.

இவ்வாறான திட்டமிடப்பட்ட புறக்கணிப்புக்கள் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யவில்லை என்பதால் இவர்கள் தனிநாடு கோரி யுத்தம் ஒன்றை ஆரம்பித்தனர்.

2009ல் யுத்தம் முடிவடைந்த போது, யுத்தம் மட்டுமே நிறைவுக்குக் கொண்டுvவரப்பட்டதாகவும் ஆனால் சிறிலங்காவில் நிலவிவரும் சமூக முரண்பாடானது இன்னமும் முடிவுக்கு வரவில்லை எனவும் பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் இன்னமும் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படாத நிலை காணப்படுகிறது.

சிறிலங்காவின் பொருளாதாரத்தைக் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இது நாட்டின் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் முதன்மை பெறுகிறது. சிறிலங்கா அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட மொழி சார் கோட்பாடானது கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார மற்றும் அரசியல் பாரபட்சங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

சிறிலங்காவைப் போன்று நீண்ட கால யுத்தத்தை முகங்கொடுத்த எந்தவொரு நாடும் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதுடன் எதிர்காலத்தில் ஏற்படவல்ல முரண்பாட்டைத் தடுப்பதற்கும் இது அவசியமானதாகும். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டியதும் மிகவும் முக்கிய விடயமாகும்.

சமத்துவமின்மையே பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ள போதிலும் இந்த விடயம் இன்னமும் உணரப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் அந்த நாட்டின் உயிர்த்துடிப்பான பொருளாதாரத்திற்கு பங்காற்றுகிறார்கள். அத்துடன் போருக்குப் பின்னான அபிவிருத்திகளிலும் இவர்கள் மிகமுக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். சிறிலங்காவைப் பொறுத்தளவில், பால்நிலைச் சமத்துவம் என்பது நிலையான, அமைதிமிக்க, சமத்துவமான எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமையும்.

woman-shadow

‘போருக்குப் பின்னான யாழ்ப்பாணத்தில் பணியாற்றுபவர்கள்: சிறிலங்காவின் வடக்கில் நிலவும் தொழில்சார் நிபந்தனைகள், வாய்ப்புக்கள் மற்றும் சமத்துவமின்மைகள் தொடர்பான ஓர் பார்வை’ என்கின்ற தலைப்பின் கீழ் Solidarity Center என்கின்ற நிறுவனமானது அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்றில், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு மட்டுமல்லாது, சிறப்புடன் செயற்படும் தொழில்சார் உறவுநிலைக்கும் சமத்துவமான அபிவிருத்திக்கும் மிகவும் இன்றியமையாத அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதிலும் சவாலைச் சந்திக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 81 சதவீதமானவர்கள் தமக்கான தொழில் நிபந்தனைகள் தொடர்பாக எழுத்துவடிவில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் கூட்டுப் பேரம்பேசலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் கொண்டிருக்கவில்லை. 85 சதவீதமான யாழ்ப்பாணத் தொழிலாளர்கள் சட்டரீதியாக ஆகக்குறைந்த வேதனம் தொடர்பான விழிப்புணர்வற்றவர்களாக உள்ளனர். அதாவது யாழ்ப்பாணத்தில் தற்போதைய ஆகக்குறைந்த வேதனம் மாதம் ஒன்றுக்கு 10,000 சிறிலங்கா ரூபா, அதாவது 69 அமெரிக்க டொலராகும்.

இந்தப் பகுதியில் பரந்தளவில் இடம்பெறும் வேதனப் பாரபட்சங்கள் பெண்களுக்கு பிரதிகூலமாக அமைந்துள்ளன என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. இப்பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் வேலைத்தளங்களில் பால்சமத்துவமின்மைக்கு முகங்கொடுக்கின்றனர் என்பதை இந்த ஆய்வின் பெறுபேறுகள் சுட்டிநிற்கின்றன. அதாவது இவர்களுக்கான தொழில் நிபந்தனைகள் மோசமானதாகவும், சட்டரீதியான உரிமைகள் பலவீனமானதாகவும் அனைத்துலக தொழிலாளர் நியமத்திற்கு அமைவாகவும் காணப்படவில்லை.

சிறிலங்காவில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனமான மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான மையத்தில் பணியாற்றும் நிசா தெல்லிப்பளை அண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்குபற்றிய பெண்ணொருவர் தனது நேர்காணலின் போது பின்வரும் கருத்தொன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதாவது ‘தொழில் வாய்ப்பிற்கான விளம்பரம் ஒன்றில் பெண்கள் தேவை எனக் கோரப்பட்டிருந்த போதிலும் அந்தப் பணிகள் பெண்களுக்குப் பொருத்தமற்றதாக இருந்தன. இது தொடர்பாக தொழில்கொள்வோரிடம் வினவியபோது ஆண்களுக்குக் கொடுக்கும் வேதனத்தை விடப் பெண்களுக்குக் குறைவான வேதனத்தை வழங்க முடியும் என்பதாலேயே ஆண்கள் செய்யவேண்டிய இந்தப் பணிக்கு பெண்தொழிலாளர்கள் கோரப்பட்டுள்ளனர் எனக் கூறினார்’  இந்த ஆய்வின் பிரகாரம் 81 சதவீதமான தொழிலாளர்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்கும் மேல் பணியாற்றுவதாகவும், இது தொழிலாளர் உரிமை தொடர்பான தேசிய சட்டத்தை மீறுவதாகவும், மேலதிக நேரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெண்களே அதிகமானவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னல் போன்றன சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படும் மிகச் சொற்பமான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சிறிலங்காவும் ஒன்றாகும். அதாவது சிறிலங்காவில் ஊழியர் சேமலாபநிதி மற்றும் பணியாளர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டு நிதியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உறுதிப்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களது முதலாளிகள் இவ்விரு நிதியங்களுக்குமான நிதியை வழங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலும் வடக்கு மாகாணத்திலும் நிலவும் இவ்வாறான தொழில் சார் சூழலானது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன்மூலம் தமது எதிர்காலத்தை நிலைபெறச் செய்யமுடியும் என நம்பும் தொழிலாளர்கள் மத்தியில் ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்கின்றது. இதன்மூலம் சிறிலங்காவில் எழுத்துமூலம் வரையப்பட்டுள்ள தொழிலாளர் உரிமைபேண் சட்டமானது நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கில் வாழும் மக்களுக்கு பாரபட்சத்தை ஏற்படுத்துகின்றது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

தொழிலாளர் உரிமைபேண் சட்டத்தை அமுல்படுத்துவதில் நாடு முழுவதிலும் பிரச்சினை காணப்படும் அதேவேளையில், வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே ஏனைய இடங்களில் உள்ள தொழிலாளர் சங்கங்கள் தமது தொழிலாளர்களின் உரிமைக்காக நீதிமன்றம் வரை சென்று சட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் இதற்கான பரிகாரத்தையும் வழங்குகின்றன.

ஆனால் தபால் சேவை, தொலைத்தொடர்பாடல் சேவை மற்றும் சுகாதார சேவைகள் போன்றவற்றுக்கான தொழிற் சங்கங்கள் சிறிலங்கா முழுவதிலும் செயற்படுகின்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான சங்கங்கள் தொழிற்படவில்லை. பொதுத் துறைக்கான சமமற்ற நிதி வழங்கலால் மக்களுக்கான சேவைகள் வினைத்திறன் மிக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த ஆய்வு அறிக்கையானது பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது:

முதலாவதாக, அரசாங்கம் மற்றும் வர்த்தக சமூகமானது தேசிய மற்றும் அனைத்துலக தொழில் நியமங்களுக்கு ஏற்ப செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய பணியை தொழிற் சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலக அபிவிருத்தி பங்குதாரர்கள் ஆகியோர் முன்னெடுக்க முடியும். தொழிலாளர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளர்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, போரின் போது சிதைவுற்ற தொழிற் சங்கங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் தொழிலாளர்கள், தொழில் கொள்வோர் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் வினைத்திறன் மிக்க கலந்துரையாடல்கள் மேற்கொள்ள வழிவகுக்கப்படும்.

மூன்றாவதாக, சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்தின் வரையறைகளை ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும். வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், அடிப்படை குறைந்த பட்ச வாழ்வாதார நியமங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான தொழிற்படு நிகழ்ச்சி நிரல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இறுதியாக, உரிய வேதனங்கள் மற்றும் தொழில் புரியும் மணித்தியாலங்களை ஆண் பெண் என்ற எவ்வித பாகுபாடுமின்றி பிரித்து வழங்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலக பங்குதாரர்கள் போன்றோர் பெண் தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

‘இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், இதற்கு முன்னர் அறிந்திராத பல விடயங்களை நான் அறிந்துகொண்டேன்’ என வடக்கு மாகாணத்தின் பெண்கள் அமைப்பின் தலைவர் சிறிதரன் ஈஸ்வரி தெரிவித்தார். இவர் இந்த ஆய்வை மேற்கொள்ள உதவியிருந்தார். ‘நாங்கள் அனைவரும் தொழிற்தளங்களில் இடம்பெறும் அநீதி மற்றும் சுரண்டல் தொடர்பாகக் கேள்விப்பட்டுள்ளோம்.

ஆனால் இது அதை விட ஆழமானதாக உள்ளது. தொழிற்தளங்களில் பெண் ஊழியர்களுக்கு எதிராக இடம்பெறும் பிரச்சினைகளை தொழிற் சங்கம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் தீர்க்க முடியும் என நானும் சக பெண்களும் நம்புகின்றோம். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்படுவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்’ என சிறிதரன் ஈஸ்வரி தெரிவித்தார்.

வழிமூலம்       – news.trust.org
ஆங்கிலத்தில்  – Timothy Ryan
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *