மேலும்

யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் ஊடகக்கல்விக்கான பாடத்திட்டத்தை வரைந்த ஈ.ஆர்.திருச்செல்வம்

e-r-thruchelvamயாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ஈ.ஆர்.திருச்செல்வம் (வயது-83) கடந்த புதன்கிழமை, யாழ்ப்பாணத்தில் காலமானார்.

யாழ். இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான ஈ.ஆர்.திருச்செல்வம், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய ஈழநாடு நாளிதழின் ஆசிரிய பீடத்தில் 1960களில் இணைந்து கொண்டு, ஊடகப் பணியாற்றத் தொடங்கினார்.

ஊடகப் பரப்பில் திருச்செல்வம் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், கொழும்பில் இருந்து வெளியாகிய சிந்தாமணி வாரஇதழில் பத்தி எழுத்தாளராகவும், யாழ்ப்பாணத்தில் இருந்த வெளியாகிய திசை வாரஇதழின் ஆசிரிய பீடத்திலும் பணியாற்றியவர்.

பின்னர், 1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் ஈழநாதம் நாளிதழ் தொடங்கப்பட்ட போது அதன் மூத்த உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார்.

ஐந்து ஆண்டுகள் ஈழநாதம் நாளிதழில் பணியாற்றிய ஈ.ஆர்.திருச்செல்வம், துறைசார் வல்லுனர்கள் மற்றும் பிரமுகர்களின் செவ்விகளை வாரம் தோறும் வெளியிட்டவர்.

e-r-thruchelvam

மதன் என்ற புனை பெயரில், இவர் அரசியல், கலை, இலக்கியம், உள்ளிட்ட பல்துறை துறைசார் கட்டுரைகளை ஏராளமாக எழுதியவர்.

ஆடற்கலை உள்ளிட்ட கலைகள் தொடர்பான விமர்சனங்களிலும் இவர் புலமை வாய்ந்தவர்.

1990களின் தொடக்கத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் புறநிலைப்படிப்புகள் அலகு, முதல் முறையாக இதழியல் கற்கை நெறியை ஆரம்பித்த போது, ஏனைய துறைசார் வல்லுனர்களுடன் இணைந்து, அந்த பாடநெறிக்கான பாடத்திட்டத்தை வரைந்து கொடுத்தவர்.

அத்துடன் இதழியல் சான்றிதழ் பாடநெறிக்கான வளவாளராக, ஏராளமான விரிவுரைகளை நிகழ்த்தியவர்.

சிறந்த ஆங்கிலப் புலமையும், மொழிபெயர்ப்பு ஆற்றலும் கொண்ட இவர் இதழியல் அடிப்படைகள் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது இறுதிச் சடங்குகள் கடந்த 29ஆம் நாள், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *