மேலும்

இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள சீன- சிறிலங்கா நெருக்கம்

wang-yi-colombo (3)சிறிலங்காவிற்கு இவ்வாண்டு அதிகளவில் வெளிநாட்டு உதவியை வழங்கிய சீனா, தொடர்ந்தும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்குவேன் என உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அதிருப்தி வலுவடைந்து வரும் நிலையிலும் சீனா இவ்வாறானதொரு உறுதியை வழங்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அண்மையில் மேற்கொண்ட சந்திப்பின் போது, சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

ஜூலை 10 அன்று முடிவிற்கு வரும் வகையில் சிறிலங்காவிற்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் ஜி, சிறிசேனவின் ஆட்சியின் போது சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த முதலாவது சீன உயர் மட்ட அதிகாரி ஆவார்.

அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் 2015ல் சிறிலங்காவின் ஆட்சியை ஏற்றுக்கொண்ட பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு  சிறிலங்கா அனுமதி வழங்கியமைக்கு வாங் யி பாராட்டியிருந்தார்.

சிறிலங்காவின் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது தற்போதைய அரசாங்கத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், பதிலீடாக எந்தவொரு நாடும் சிறிலங்காவில் தனது முதலீடுகளை மேற்கொள்ள முன்வரத் தவறியதன் காரணமாக இவ்வாண்டு ஆரம்பத்தில் மீண்டும் துறைமுக நகரத் திட்டப் பணிகளை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் சீனாவை அசட்டை செய்த சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர், இறுதியில் சீனாவை வரவேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாங் யியுடனான சந்திப்பின் போது, சீனாவின் பொது மற்றும் தனியார் துறைகளின் மேலதிக முதலீடுகளை சிறிலங்கா அதிபர் வரவேற்றிருந்தார். இரண்டு நாடுகளும் இருதரப்பு நலன்களையும் கவனத்திற் கொண்டு இணைந்து செயற்பட வேண்டியதன் தேவையையும் இவர் வலியுறுத்தியிருந்தார்.

‘சீனாவானது சிறிலங்காவுடனான ஒத்துழைப்பிற்கான நேர்மையான, நம்பிக்கைக்குரிய பங்காளி என்பதை சிறிலங்கா மதிப்பீடு செய்ய முடியும். சிறிலங்காவில் சீனாவால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் இதற்கு சான்றுபகர்கின்றன’ என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லு காங், கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

மாறிவரும் அனைத்துலகச் சூழல் என்பதற்கு அப்பால், சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளினதும் மூலோபாயப் பங்களிப்பானது மேலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என காங் சுட்டிக்காட்டினார்.

‘21ம் நூற்றாண்டிற்கான கரையோரப் பட்டுப்பாதைத்’ திட்டத்திற்கு சிறிலங்கா வழங்கி வரும் ஆதரவு தொடர்பாகவும் சிறிலங்காவின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் தொடர்பாகவும் சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது, யி குறிப்பிட்டிருந்தார்.

‘கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தை’ இணைந்து கட்டியெழுப்புவதன் ஊடாக, சிறிலங்காவின் அபிவிருத்தி இலக்கு மற்றும் எதிர்காலத்தில் இந்திய மாக்கடலில் கப்பல்கள் தரித்து நிற்பதற்கான கேந்திர அமைவிடமாகவும் நிதி மையமாகவும் சிறிலங்காவை மாற்றியமைப்பதற்கு தொடர்ந்தும் சீனா உதவும் எனவும் யி குறிப்பிட்டார்.

சீனாவின் இந்த முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் துணைநிற்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். ‘இந்திய மாக்கடலின் வர்த்தக மையமாக தன்னை மாற்றிக் கொள்வதற்கான சிறிலங்காவின் திட்டத்திற்கு சீனாவும் துணை நிற்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் சிறிலங்காவானது இழந்து போன தனது புராதன வரலாற்றில் குறிப்பிடப்பட்டது போன்று இந்திய மாக்கடலின் வர்த்தக மையமாக மீண்டும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள முடியும். 21ம் நூற்றாண்டிற்கான கரையோரப் பட்டுப் பாதைத் திட்டமானது பாரியதொரு பொருளாதார ஒத்துழைப்பு எனவும் இதன்மூலம் நட்புரிமை, பொருளாதார ஒத்துழைப்பு, சமூக மற்றும் கலாசார பரிமாற்றங்கள் போன்றனவும் மேற்கொள்ளப்பட முடியும்’ என சமரவீர குறிப்பிட்டார்.

இரு நாடுகளிற்கும் இடையில் பலமான நட்புறவைக் கட்டியெழுப்பத்தக்க வகையில் அடிக்கடி இவ்வாறான உயர் மட்டச் சந்திப்புக்களை மேற்கொள்வதெனவும் சிறிலங்கா தலைவர்களும் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சரும் தீர்மானித்தனர். அத்துடன் சீனாவுடன் சுதந்திர வர்த்த உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவது தொடர்பாகவும் சிறிலங்கா கலந்துரையாடியது.

வாங் யியின் சிறிலங்காவிற்கான வருகையும், பட்டுப்பாதைத் திட்டம் தொடர்பாக சிறிலங்காவால் சீனாவிற்கு வழங்கப்பட்ட ஆதரவு போன்றன சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கா மற்றும் சீன அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் தொடர்பாக இந்தியா விசனமடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இதேபோன்று ஜூன் மாதம் சிறிலங்கா அதிபர் சிறிசேனவிற்கு இரண்டாவது தடவையாக சீன அதிபரால் தனது நாட்டிற்கு வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.

இதற்கு அப்பால், சீனாவின் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக சிறிலங்கா அறிவித்ததானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சூழவும், மூலோபாய முக்கியத்துவம் மிக்க கடல்வழிகளில் உள்ள துறைமுகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே பட்டுப்பாதைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

2016 ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான முதல் காலாண்டில் சிறிலங்கா மீது அதிகளவில் நிதியை முதலீடு செய்த நாடாகத் தொடர்ந்தும் சீனாவே விளங்குவதாக சிறிலங்காவின் நிதி அமைச்சு அண்மையில் அறிவித்தது.

சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட 885 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நிதித் திட்டங்களில் அரைவாசி நிதி சீனாவிடமிருந்தே பெறப்பட்டதாக நிதி அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழிமூலம்         – Asia times
ஆங்கிலத்தில்   – MUNZA MUSHTAQ
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *