மேலும்

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக சுவிசில் வழக்கு

ltte-flagவிடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டினார்கள் என்று, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சுவிஸ், ஜேர்மனி, மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த இவர்கள் மீது குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தமை அல்லது அதற்கு உதவியமை, மோசடி, போலி சான்றிதழ், பணச்சலவை, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நுண்கடன் திட்டங்களின் கீழ் சூரிச்சில் உள்ள  வங்கியில் இருந்து நிதி திரட்டப்படடுள்ளதாகவும், உலகத் தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் இந்த நிதி திரட்டல் இடம்பெற்றுள்ளதாகவும் சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் காவல்துறையின் உதவியுடன் நடத்திய விசாரணைகளில், கணிசமான நிதி புலம் பெயர்ந்தோரிடம் இருந்து திரட்டப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் 2009ஆம் ஆண்டு சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததுடன் இந்த நிதி திரட்டும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பெலின்சோனாவில் உள்ள சமஷ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரம் தொடர்பான விசாரணைகள் எப்போது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

அதேவேளை, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13 பேரின் விபரங்களையும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *