மேலும்

‘தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்’– ஒரு முன்னாள் பெண் போராளியின் ஆதங்கம்

Ranjini Sudhanபோர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து மீண்டும் இயல்பான வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.

அரசியல் தலைமைத்துவத்தின்  அக்கறையின்மை, அதிகாரத்துவப் போட்டி, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் முன்னாள் போராளிகளை சந்தேகக் கண்ணோடு நோக்குதல் போன்ற பல்வேறு காரணிகள் இவர்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்புவதற்குத் தடையாக உள்ளன. உள்நாட்டு யுத்தமானது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த போதிலும் இன்றும் யுத்த நினைவுகள் முன்னாள் போராளிகளின் மனங்களை விட்டு அகலாதிருப்பதற்கு சிறிலங்கா அரசின் செயற்பாடுகளே காரணமாக உள்ளன.

‘நாங்கள் எமது வாழ்வைக் கொண்டு செல்வதில் பல்வேறு சவால்களுக்கு உட்படுகிறோம். எமக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கிறோம். இதனால் எமக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட வடுக்களை மறக்க முடியவில்லை. இவ்வாறான செயல்கள் எமக்கு எமது வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது’ என தனது கணவனை இழந்து, 10 வயது மகளுடன் கிளிநொச்சியின் செல்வபுரத்தில் வாழும் முன்னாள் போராளியும் மாற்றுத் திறனாளியுமான றஞ்சினி தெரிவித்தார்.

சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி பிரதேச செயலர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் 163 கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர். இந்தப் பிரதேச செயலர் பிரிவில் மொத்தமாக 1800 கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். சில குடும்பங்களில் கணவன்மார் இருந்தும் பெண்களே தமது குடும்பத்தைத் தலைமை தாங்கும் நிலையும் காணப்படுகிறது.

2009 ஏப்ரல் 24ல் ரஞ்சினி தனது 38 வயதுக் கணவரான சுதனுடனும் தனது இரண்டரை வயது மகளான பெலிசியாவுடனும் முல்லைத்தீவின் புதுமாத்தளனில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தார். இவரது கணவர் புலிகள் அமைப்பின் ராதா வான்பிரிவில் கடமையாற்றியிருந்தார்.

சுதன் இராணுவத்தில் சரணடைந்த பின்னர் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு வேறிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சிறப்புத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார். ஆனால் 2009 டிசம்பரில் மாரடைப்புக் காரணமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். தனது கணவர் இயற்கை மரணம் எய்தினார் என்பதை றஞ்சினியால் நம்பமுடியவில்லை. ஆனால் வேறு வழியில்லாமல் தனது கணவரின் மரணத்தை ரஞ்சினி ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

Ranjini Sudhan

‘எனது கணவரின் இறப்புத் தொடர்பாக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யுமாறு என்னிடம் சிலர் கூறினர். ஆனால் இதனைச் செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. எனது மகளை ஆளாக்குவதே எனது வாழ்வின் மிக முக்கிய பொறுப்பு என்பதை நான் தீர்மானித்தேன்’ என ரஞ்சினி இன்னமும் முடிவுறாத தனது வீட்டிலிருந்தவாறு தெரிவித்தார்.

ரஞ்சினி அம்பாறை, அக்கரைப்பற்றைச் சொந்த இடமாகக் கொண்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராவார். இவரது குடும்பம் போரால் பாதிக்கப்பட்ட குடும்பமாகும். இவரது தந்தையார் புலிகள் அமைப்பிற்கு எதிரான, ‘மூன்று நட்சத்திரம்’ (திரீஸ்டார்) என்கின்ற அமைப்பால் கொல்லப்பட்டார். இவரது சகோதரர் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவில் கடமையாற்றியதன் காரணமாக சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ரஞ்சினி தனது புனர்வாழ்வுப் பயிற்சியை முற்று முழுதாக நிறைவு செய்து வெளியேறியிருந்தார். இவர் கைதுசெய்யப்பட்ட போது புலிகள் அமைப்பின் உறுப்பினராக இல்லாததால் எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டார். இவர் யுத்த களத்தில் காயமுற்றதால் 2000ல் புலிகள் அமைப்பிலிருந்து விலகினார்.

‘ஏப்ரல் 14, 1991 அன்று வவுனியா, பூவரசங்குளத்தில் இடம்பெற்ற  சண்டையில் வீசப்பட்ட எறிகணையினால் எனது வயிற்றில் காயமேற்பட்டது. 1995ல், நான் 13 நாட்கள் வரை யாழ்ப்பாண வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்தேன். இதன் காரணமாக எனது ஒரு கை பாதிக்கப்பட்டது. என்னால் ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்ய முடிகிறது’ என ரஞ்சினி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு:

புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட ரஞ்சினி இன்றுவரை சிறிலங்கா அரசாங்கத்தால் எவ்விதத்திலும் கவனிக்கப்படவில்லை. மாறாக இவர் முன்னாள் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்துடனேயே நோக்கப்படுகிறார். கை ஒன்று இயங்காத நிலையில் தனது வருமானத்தை ஈட்டிக் கொள்வதில் ரஞ்சினி மிகவும் சிரமப்பட்டார்.

‘நான் எனது வீட்டைத் திருத்துவதற்கும் கோழிப் பண்ணை ஒன்றை உருவாக்குவதற்கும் அரச வங்கி ஒன்றுக்கு 13 தடவைகள் செல்ல வேண்டியிருந்தது. வங்கிக்குச் செல்வதற்கான முச்சக்கரவண்டிச் செலவாக ரூ.14,000 வரை செலவிட்டேன். ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது எனது வீட்டைத் திருத்துவதற்காக எவ்வித நிதியுதவியையும் அளிக்கவில்லை.

ஐ.நா Habitat நிறுவனமானது ரூ2.2இலட்சம் நிதியுதவியை வழங்கியது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எனக்கு ரூ1.95 இலட்சம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தார். இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் எனக்கு நிதியுதவி செய்தார். அத்துடன் அரசசார்பற்ற நிறுவனமான ஏ.எப்.சி கோழிப் பண்ணை ஒன்றை உருவாக்குவதற்கான நிதியுதவியை அளித்தது. இதன்மூலம் நான் எனக்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறேன்’ என ரஞ்சினி தெரிவித்தார்.

தனது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காணாமற் போனோருக்காகக் குரல் கொடுக்கும் அனந்தி சசிதரன் எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை என ரஞ்சினி கவலை தெரிவித்தார். தனது அழைப்புகளுக்குக் கூட அனந்தி பதிலளிக்கவில்லை என ரஞ்சினி கூறினார்.

தனது ஒரேயொரு மகள் அவளது சொந்தக் காலில் நிற்கக்கூடிய அளவிற்கு கல்வியைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே ரஞ்சினியின் ஒரேயொரு இலட்சியமாகும். போதியளவு வருமானம் இல்லாததன் காரணமாக தனது மகளை தனியார் கல்வி நிறுவனத்திற்கு அனுப்ப முடியவில்லை என ரஞ்சினி ஆதங்கப்பட்டார். ரஞ்சினி க.பொ.த சா.த வரை கல்வி கற்றவர் என்பதால் தனது மகளுக்கு தானே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

தொடர்ச்சியான கண்காணிப்பு:

முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் ஆயுதம் தூக்குவதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது தொடர்ச்சியாகக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சிறிலங்கா அரசு கூறும் அதேவேளையில், இவ்வாறான கண்காணிப்புக்கள் முன்னாள் போராளிகள் தமது கடந்த காலத்தை ஞாபகப்படுத்துவதற்கு வழிவகுப்பதாக ரஞ்சினி தெரிவித்தார்.

‘எனது கடந்த கால வாழ்வை எனது நினைவுகளிலிருந்து அழித்துவிட்டு, புதிய வாழ்வைத் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பாகும். ஆனால் ஒரு ஆண்டில் மூன்று தடவைகள் நான் எனது கடந்த கால வாழ்க்கை தொடர்பான ஆவணங்களை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்பினரிடம் கையளிக்க வேண்டியுள்ளது. சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இவர்கள் என்னைத் தொடர்ந்தும் கண்காணிக்கின்றனர்.

அவர்கள் எனது கடந்த கால வாழ்வு தொடர்பாகவும் எனது தற்கால வாழ்வு தொடர்பாகவும் விசாரணை செய்வார்கள். அவர்கள் இறந்து போன எனது கணவர் தொடர்பாகக் கேட்பார்கள். இவை அனைத்தும் நான் எனது கடந்த கால வாழ்வை மறப்பதற்குப் பதிலாக தொடர்ந்தும் என் மீதும் என் மகள் மீதும் பாதிப்பைச் செலுத்துகிறது’ என ரஞ்சினி தெரிவித்தார்.

‘புலனாய்வுப் பிரிவினர் வீட்டிலிருந்து சென்றவுடன் பத்து வயது எனது மகள் கேட்கும் பல்வேறு வினாக்களுக்கு நான் பதிலளிக்க வேண்டும்’ என ரஞ்சினி தெரிவித்தார்.

கொலை வலயமான புதுமாத்தளனிலிருந்த போது தனது மகளுக்கு இரண்டரை வயது மட்டுமே எனவும் அப்போது அவளது நினைவுகளிலிருந்து அழிக்க வேண்டிய கசப்பான சம்பவங்களை தற்போதும் இராணுவப் புலனாய்வாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளால் அவளால் தொடர்ந்தும் நினைவுபடுத்தப்படுவதாக ரஞ்சினி கவலை தெரிவித்தார்.

அக்கரைப்பற்றிலுள்ள தனது குடும்பத்தாரைக் கூட காவற்துறையினர் விட்டு வைக்கவில்லை எனவும் ரஞ்சினி தெரிவித்தார்.

‘அவர்களிடம் என்னைப் பற்றி விசாரிப்பார்கள். நான் எனது குடும்பத்தவர்களிடம் காவற்துறையினரிடம் எதுவும் பேசவேண்டாம் என்றும் அவர்களிடம் என்னிடம் வந்து விசாரிக்குமாறு கூறுமாறும் தெரிவிப்பேன்’ என ரஞ்சினி தெரிவித்தார்.

ஒருதடவை சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் தனது அனுமதியின்றி தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்ததாகவும் அவர்களிடம் ஏன் அவ்வாறு செய்தீர்கள் என வினவியபோது, படலை திறந்திருந்தது என அவர்கள் பதிலளித்தாகவும் ரஞ்சினி குறிப்பிட்டார்.

‘சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரின் இந்தப் பதில் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கதவு திறந்திருந்தால் வீட்டிற்குள்ளும் வருவீர்களா என நான் அவர்களைக் கேட்டேன்’ என்றார் ரஞ்சினி. ‘நெருக்கடி மிக்க தருணங்களில் நாங்கள் கோழை போன்று பயந்து ஓடினால் எலி கூட எம்மைத் துரத்தும்’ என்கின்ற பழமொழியை ரஞ்சினி கூறினார்.

தன்னை சிங்கள இராணுவத்தினர் மட்டுமே கொல்ல முயன்றதாகவும் ஆனால் சாதாரண சிங்கள மக்களைத் தான் எதிர்க்கவில்லை எனவும் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த வேளையில் சிங்களப் பெண் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தாகவும் ஆனால் அவர்கள் தான் முன்னாள் புலி உறுப்பினர் என்கின்ற எவ்வித விரோதத்தையும் காண்பிக்காது அன்புடன் பழகியதாகவும் முகாமை விட்டு வெளியேறிய போது தன்னைக் கட்டியணைத்து ஆரத்தழுவியதாகவும் ரஞ்சினி தெரிவித்தார்.

சிங்களவர்கள் வடக்கில் பணியாற்றுவது தொடர்பாக ரஞ்சினியிடம் வினவியபோது, ‘தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதையோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்தின் கோட்பாட்டின் பிரகாரம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையோ எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தமிழ் மக்களாகிய நாங்கள் தென்னிலங்கைக்குச் சென்று பணிசெய்தல் மற்றும் தங்கியிருத்தல் போன்று சிங்களவர்களும் வடக்கில் பணியாற்றலாம். தங்கியிருக்கலாம். அவர்களும் மனிதர்களே.

ஆங்கிலத்தில்  –  P.K.Balachandran
மொழியாக்கம் – நித்தியபாரதி
வழிமூலம்        – The New Indian express

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *