மேலும்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியா கட்டிய ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்

launching SLNS Sayurala (1)சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

வாஸ்கோவில் உள்ள கோவா கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

‘சயுரால’ என்று சிறிலங்கா கடற்படையினரால் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை, சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவியான வசந்தா குணவர்த்தன, வைபவ ரீதியாக இயக்கி வைத்தார்.

launching SLNS Sayurala (1)launching SLNS Sayurala (2)launching SLNS Sayurala (3)இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 74 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படுகிறது, 2350 தொன் எடையும், 105 மீற்றர் நீளத்தையும் கொண்ட இந்தக் கப்பலில், உலங்குவானூர்தி இறங்கு தளமும் உள்ளது.

சுமார் 4500  கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பில் ஈடுபடக் கூடிய இந்தக் கப்பலில், 18 அதிகாரிகள் மற்றும் 100 மாலுமிகள் பணியாற்றுவர்.

இந்தக் கப்பல் வெள்ளோட்ட நிகழ்வில், இந்திய பாதுகாப்பு அமைச்சின், வான்பொறி்யியல் மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான இணைச் செயலர்,  சஞ்சய் பிரசாத், புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன், இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதிகளான அட்மிரல் அருண் பிரகாஸ் மற்றும் அட்மிரல் சுரேஸ் மேத்தா, கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைப் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் சேகர் மிட்டல், மற்றும் இந்திய சிறிலங்கா அதிகாரிகள், இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *