மேலும்

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும்- சம்பந்தன்

R.sampanthanவடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் உடனடியாக திரும்பக் கையளிக்கப்பட  வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய அவர்,

“சிறிலங்கா அதிபர் மைத்திரி பால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேசிய போது அவர்கள் காணிகளை விடுவிக்க இணங்கியிருந்தனர்.

போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியும் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்களின் காணிகளை படையினர் வைத்திருப்பதால் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு எமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் 50 பேர் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறையில் வாடுகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டம் அவசியம்.

உண்மையான, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தின் மூலமே நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும்.

நீதி, சமத்துவம், எல்லா மக்களும் சமமாக நடத்தப்படுவதன் மூலமே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *