மேலும்

சிறிலங்காவில் நம்பிக்கையிழந்து வரும் தமிழர்கள் – ஏபி

missing-relativesதமது நிலங்கள் மீள வழங்கப்படும் எனவும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்கப்படும் எனவும் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது தாம் ஏமாற்றமடைவதாக கருதுகின்றனர்.

இவ்வாறு ஏபி  செய்தி நிறுவனத்துக்காக Krishan Francis  எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். புதினப்பலகைக்காக இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் இடம்பெற்ற நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் காணாமற்போன தனது மகன் தொடர்பான தகவலுக்காக தமிழ்ப் பெண்மணியான சாந்தா காத்துக் கொண்டிருக்கிறார். நீண்ட காலத்தின் பின்னர், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள சிங்களப் பெரும்பான்மை அரசாங்கமானது கடந்த கால வடுக்களை ஆற்றும் எனவும் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வு காணும் எனவும் இவர் சிறிதளவு நம்பியிருந்தார்.

‘நான் எனது மகனைத் தேடிச் செல்லாத இடமேயில்லை. நான் எனது மகனை இறுதியாக மார்ச் 2009ல் பார்த்தேன். அப்போது அவனுக்கு 23 வயது. துப்பாக்கிச் சூட்டின் போது அவன் காயமடைந்திருந்தான். அவனைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதாக இராணுவத்தினர் வாக்குறுதி வழங்கியிருந்தனர். ஆனால் அதன் பின்னர் எனது மகன் தொடர்பான எவ்வித தகவலையும் நான் பெறவில்லை. தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி தொடர்பாகக் கூறுகிறது. ஆனால் நல்லாட்சி வந்தது போல் தெரியவில்லை’ என சாந்தா அழுதவாறு தெரிவித்தார்.

சாந்தா போன்றே பல ஆயிரக்கணக்கான சிறுபான்மைத் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டு வரும் போருக்குப் பின்னான மீளிணக்கப்பாட்டு வாக்குறுதிகள் மற்றும் அவை தொடர்பில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை இழந்து வாழ்கின்றனர்.

missing-relatives

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள அதேவேளையில், இந்த எண்ணிக்கையானது இதை விட அதிகரித்திருக்கலாம் என மனித உரிமை அமைப்புக்கள் நம்புகின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் மாத்திரம் 40,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்ப் புலிகளைப் போரில் தோல்வியுறச் செய்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியானது கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்ததன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் பழைய வடுக்கள் ஆற்றப்பட்டு தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்த போதிலும் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. ‘இது மிகவும் கடினமானது. இது மிகவும் சவால் மிக்கது’ என கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஏழாவது யுத்த வெற்றி நிகழ்வின் போது அதிபர் சிறிசேன அறிவித்தார்.

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட உடமைகள் சிலவற்றை சிறிசேனவின் அரசாங்கமானது மீண்டும் பொதுமக்களிடம் கையளித்துள்ளது. பொதுநிர்வாகத்தின் மீதான இராணுவத் தலையீடு குறைக்கப்பட்டுள்ளது. சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நகர்வுகளை எதிர்த்து சிங்களத் தேசியவாத அமைப்புக்கள் ஏற்கனவே போராட்டம் மேற்கொண்டு வருகின்றன. ‘வன்முறையற்ற மீளிணக்கமானது வெறுமனே செங்கற்கள், சீமெந்து, இரும்பு, மணல் மற்றும் ஏனைய மூலவளங்களைக் கொண்டு ஒருபோதும் கட்டியெழுப்பப்பட முடியாது’ என சிறிசேன தெரிவித்தார்.

‘மீளிணக்கப்பாடு என்பது மக்களின் மனங்களை ஒன்றிணைத்தல், துன்பங்களுக்கு ஆளாகியவர்களை ஒன்றிணைத்தல், வெறுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது’ என சிறிசேன தெரிவித்தார்.

போரின் போது வீடுகளை இழந்த தமிழ் மக்களைப் பொறுத்தளவில் நாட்டில் மாற்றங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது. தொழில் வாய்ப்புக்கள் காணப்படவில்லை. காணாமற் போன தமது இரத்த உறவுகளின் நிலை என்ன என்பதை அறிய முடியாது மக்கள் தவிக்கின்றனர். முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மரணச் சான்றிதழைப் பெறுவதற்கு பலர் மறுத்துவிட்டனர். காணாமற் போன தமது உறவுகள் பலருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை அறியாது மக்கள் கவலை கொள்கின்றனர். இதற்காக இவர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான மோதல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பாகின.  இதன் பின்னர் ஆங்கிலேயர்களின் கொலனித்துவ ஆட்சியின் கீழ் தமிழர்களின் வாழ்விடங்களிலேயே அதிகளவான ஆங்கிலப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் தமிழர்கள் பலர் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தனர். இது மட்டுமல்லாது தமிழர்கள் பலர் மருத்துவம், சட்டம் போன்றவற்றிலும்  உயர் பதவி வகித்தனர். இதுவே சிங்களவர்கள் மத்தியில் தாம் ஓரங்கட்டப்பட்டு விட்டோம் என்கின்ற மனநிலையை உருவாக்கியது.

1948ல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர், இந்த நாட்டின் முழு அதிகாரத்தையும் சிங்களவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதன்பின்னர் தாங்கள் எல்லா விடயங்களிலும் ஓரங்கட்டப்படுவதாக தமிழர்கள் கருதத் தொடங்கினர். இதுவே தமிழ்ப் புலிகள் அமைப்புத் தோன்றுவதற்கும் யுத்தம் ஆரம்பமாவதற்கும் காரணமாக இருந்தன. யுத்தத்தின் போது, போர்க் குற்றங்கள் இழைத்ததற்காக இரண்டு தரப்பாலும் குற்றம் சுமத்தப்பட்டனர். ஆனால் இதுவரை இது தொடர்பான எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

சிறிலங்காவின் அதிபராக மகிந்த ராஜபக்ச பதவி வகித்த போது, போர்க் குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை மறுத்து வந்தார். அத்துடன் தனது இராணுவத்தினர் எவ்வித மீறல்களிலும் குறிப்பாக போர்க் கைதிகளைப் படுகொலை செய்தமை, பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலைகளைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களுக்கான உணவு மற்றும் மருந்து வழங்கலுக்குத் தடையிட்டமை போன்ற பல்வேறு மீறல்களிலும் ஈடுபடவில்லை என மறுத்தார்.

இதேவேளையில், புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, சிறுவர் போராளிகளை போரில் ஈடுபடுத்தியமை மற்றும் தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோட முயன்ற மக்களைக் கொன்றமை போன்ற பல்வேறு மீறல்களிலும் ஈடுபட்டனர்.

2010ல் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட காணொலியில் சரணடைந்த போர்க் கைதிகள் பலர் சிறிலங்கா இராணுவ வீரர்களால் கைகள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் பதிவேற்றப்பட்டன. இந்தக் காட்சிகள் இராணுவத்தினராலேயே அவர்களது தொலைபேசிகளில் எடுக்கப்பட்டிருந்தன. இந்தக் காட்சிகள் அனைத்தும் போலியானவை என ராஜபக்ச தெரிவித்தார். ஆனால் இந்தக் காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என கடந்த மாதம் சிறிசேனவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

போரின் பின்னர் சிங்களவர்கள் போர் வெற்றி மமதையில் இருந்தமையே இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பிரதான காரணம் என அவதானிகள் கூறுகின்றனர். ‘மீளிணக்கப்பாடு தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் எவ்வித விழிப்புணர்வும் காணப்படவில்லை. இதுவே அரசாங்கம் தனது நகர்வுகளை முன்னெடுப்பதில் தடையாக உள்ளது’ என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.

ஜூன் 13 அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் சிறிலங்காவில் எவ்வளவு தூரம் மீளிணக்கப்பாடு இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் தெரிவிக்கவுள்ளார். அனைத்துலகப் பங்களிப்புடன் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா உடன்பட்டது. இதனை மனித உரிமைகள் பேரவையின் கடந்த ஆண்டுக் கூட்டத் தொடரின் போது புகழ்ந்து பாராட்டப்பட்டது.

தமிழ் மக்களுக்கு மேலும் அரசியல் அதிகாரத்தை வழங்கக் கூடிய, பாராட்பட்சத்திற்கு எதிரான பாதுகாப்புக்களை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு ஒன்று வரையப்படுகின்றது. அத்துடன் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான கால தாமதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தமது நிலங்கள் மீள வழங்கப்படும் எனவும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்கப்படும் எனவும் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது தாம் ஏமாற்றமடைவதாக கருதுகின்றனர்.

தனது நிலத்தைத் தன்னிடம் திருப்பித் தரவில்லை என யாழ்ப்பாணத்திலுள்ள 68 வயதான கஸ்தூரி கவலையடைகிறார். இவரது சொந்த நிலமானது கடந்த மூன்று பத்தாண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. ‘அதிபர் எங்களை நேரில் வந்து பார்த்தபோது, ஆறு மாதங்களுக்குள் எமது இடங்களுக்குச் செல்லலாம் என வாக்குறுதி வழங்கியிருந்தார். ஐந்து மாதங்கள் கடந்து விட்டன. இன்னமும் எவ்வித நகர்வும் முன்னெடுக்கப்படவில்லை. எமது ஆதங்கங்களையாவது தற்போது வெளியிட முடிவதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம். முன்னைய ஆட்சியில் நான் இவ்வாறான கருத்துக்களைக் கூறியிருந்தால் தற்போது நான் கடத்தப்பட்டிருப்பேன்’ என கஸ்தூரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *