மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு 4 மாத சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அதிபர் முடிவு

Lt. Gen. Krishantha de Silvaசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளை ஏற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, வரும் டிசெம்பர் மாதம் வரை- நான்கு மாதகால சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் ஓகஸ்ட் 22 ஆம் நாளுடன், இராணுவத் தளபதியின் பணிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், ஒரு ஆண்டுகால சேவை நீடிப்பை அவர் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு,  கூட்டுப்படைகளின் தளபதி பதவி வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, தற்போது கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக இராஜதந்திரப் பதவி ஒன்றில் நியமிக்கப்படவுள்ளார்.

இதனிடையே, லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சேவை நீடிப்பு வழங்கப்படுவதற்கு சிறிலங்கா இராணுவத்துக்குள் கடும் எதிர்ப்புக் காணப்படுகிறது.

இவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும், இராணுவ ஒழுக்கத்தை புறக்கணிப்பதாகவும், திறமையான அதிகாரிகளை ஓய்வில் அனுப்புவதாகவும், குற்றம்சாட்டி சிறிலங்கா அதிபர், பிரதமர், மற்றும் அமைச்சர் பீல்டட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு, கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சேவை நீடிப்பு, அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்புக்களைக் கொண்ட, மூத்த இராணுவ அதிகாரிகள் பலம் 55 வயதை எட்டி, ஓய்வுபெறும் நிலை ஏற்படும்.

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த,  மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஆகியோரே அவர்களாவர்.

அதேவேளை, அடுத்த ஆண்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்படக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ள அதிகாரிகளாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக, மேஜர் ஜெனரல் சுதந்த, ரணசிங்க, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *