மேலும்

சிறிலங்காவில் இன்னமும் பாதிக்கப்படும் தமிழர்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

jaffna-tamils (1)தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் முகமாகவே சிறிலங்காவின் பௌத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் Red Flag இதழில், Rutaban Yameen எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ‘சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள்’ அமைப்பால் WITHERING HOPES என்கின்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் இந்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்சவின் தலைமையின் கீழ் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 26 ஆண்டுகால யுத்தம் 2009 மே மாதம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

1948ல் சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து, தமிழ் மக்கள் பல்வேறு வழிகளில் சிங்கள பௌத்த அரசின் திட்டமிட்ட பாரபட்சங்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

‘அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தொடர்ந்தும் பல்வேறு மீறல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் தமக்கே உரித்தான சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்’ என புலம்பெயர் தமிழர் இளையோர் வலைப்பின்னலின் உறுப்பினரான ஆதித்தன் ஜெயபாலன் தெரிவித்தார்.

ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் அதிகாரத்துவம் மற்றும் சிங்கள தேசியவாதிகளின் ஆட்சி போன்றன அதிகரித்ததன் பிற்பாடு சிறிசேனவின் பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றியானது நிலையான நிதி கிடைக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

2015 இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 81.5 சதவீதமானவர்கள் வாக்களித்தனர் என சிறிலங்காவின் தேர்தல் ஆணையகத்தின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில்  தமிழ் மக்கள் சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகளவில் வாக்களித்தனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். இந்த ஆட்சியில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள்; குறைவடைந்தன. ஆனால் இவ்வாறான மாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்டன.

‘1978ல் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமானது ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மிகவும் மோசமானதாக காணப்பட்டது. இந்த நிலை தற்போதும் தொடர்கிறது’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவிற்கான வல்லுனர் அலன் கீனன் தெரிவித்தார். ‘மக்கள் முறைப்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய நிலை தற்போது காணப்பட்டாலும் கூட பயங்கரவாதப் பொறிமுறையானது மக்களை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றது’ என அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியற் கட்சிகளை விடுவிக்குமாறும், காணாமற் போனவர்கள் தொடர்பாக தகவல் வழங்குமாறும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை மீளவும் கையளிக்குமாறும் கடந்த ஆண்டு தமிழ் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசாங்கத்தால் தடைகள் போடப்பட்டிருப்பினும், போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலிகள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஒக்ரோபரில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிசேன அரசாங்கமானது இணைஅனுசரணை வழங்கியது. இத்தீர்மானத்தின் பிரகாரம் தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கான மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு போன்றதொரு ஆணைக்குழுவை சிறிலங்காவிலும் உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறான மாற்றங்கள் ஏனையோர் எதிர்பார்ப்பது போன்று விரைவாக மேற்கொள்ளப்பட முடியாது என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான அரசியல் உறுதிப்பாடும் வீரத்தையும் சிறிலங்காவின் அதிபர் மற்றும் பிரதமர் கொண்டுள்ளனர்.

நாட்டினதும் இராணுவ வீரர்களினதும் இறையாண்மை பாதுகாக்கப்படும் என இவ்வாண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் அதிபர் சிறிசேன வாக்குறுதி வழங்கினர். அத்துடன் இந்நாட்டு இராணுவத்திற்கு அனைத்துலக அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற மாதத்தில், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமைச்சரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் யுத்த காலத்தில் கட்டளைகளை வழங்கியிருந்தார் என்பதுடன் இவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட இராணுவ வீரர்கள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்டனர். அத்துடன் பாலியல் மீறல்கள், போர்க் கைதிகள் படுகொலை போன்ற பல்வேறு மீறல்களை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டுக்கான பாதுகாப்புச் செலவீனம் 2014 ஐ விட 20 பில்லியன் சிறிலங்கா ரூபாவினால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, வடக்கு கிழக்கானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கை, கல்வி, சொத்துக்கள் மற்றும் அபிவிருத்தி, கட்டுமாணம் போன்ற அனைத்து விடயங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு காணப்படுகிறது. சிறிலங்காவில் 300,000 இராணுவ வீரர்கள் உள்ளனர்.

‘எமது இடத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் எங்களை இலங்கையர்கள் என்கின்ற அடையாளத்திற்குள் உட்படுத்துவதே அவர்களது நோக்காகும்’ என மட்டக்களப்பைச் சேர்ந்த 45 வயதான பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் முகமாகவே சிறிலங்காவின் பௌத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே இவ்வாறான அச்சுறுத்தல்கள் நீக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை நிலவும் நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக, சுயநிர்ணய உரிமையுடனும், நீதியுடனும் வாழமுடியும்? என ஜெயபாலன் வினவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *