மீண்டும் பீஜிங் செல்கிறார் சிறிலங்கா அதிபர் – சீன அதிபரிடம் இருந்து அழைப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
சீன அதிபரின் அழைப்பை ஏற்று, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்குலகுடன் வளர்ந்து வரும் உறவுகளுக்காக சீனாவுடன் கொண்டுள்ள நீண்டகால உறவை சிறிலங்கா இழக்க முடியாது. என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம், சீனாவுக்கான முதல் பயணத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.