மேலும்

தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்துக்காக போரை நிறுத்தினர் புலிகள் – தென்கொரியாவில் ரணில்

ranil-rotary (1)தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக விடுதலைப் புலிகள், தாமாகவே போரைநிறுத்த முன்வந்தனர் என்று தென்கொரியாவில் நடந்த அனைத்துலக ரோட்டரிக் கழகத்தின் 107ஆவது மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தென்கொரியத் தலைநகர் சியோலில், நேற்று நடந்த இந்த மாநாட்டில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது-

”எமது சிறிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், உங்களது மிகப் பாரிய அமைப்பின் இந்த ஆண்டு தலைமைத்துவத்தை வகிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டமையும், இலங்கையரான எமக்கு மிகுந்த பெருமையையும் அபிமானத்தையும் பெற்றுத் தரும் ஓர் அம்சம். சிறிலங்காவில் போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை. இரண்டு பத்தாண்டுகளுக்கு அதிக காலமாக, எமது நாட்டிலிருந்து போலியோ நோயாளிகள் கண்டறியப்படவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் கடுமையாக மூழ்கியிருந்த சந்தர்ப்பத்திலேயே நாம், போலியோ நோயையும் நாட்டிலிருந்து இல்லாதொழித்தோம். ரோட்டரி கழகத்தின் பங்களிப்புக் காரணமாகவே, அந்தப் பணியைச் சிறப்பான வகையில் மேற்கொள்ள முடிந்தது.

தேசிய நோய்த்தடுப்புப் பணிக்காக ஒன்றரை மில்லியன் டொலர்களை ஒதுக்கி, ஒரே தடவையில் முழு நாட்டுக்கும், போலியோ தடுப்பு மருந்தை வழங்குவதற்காக, மீதிச் செலவை அரசாங்கத்தினால் மேற்கொள்ளுமாறும், ரோட்டரி கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

ranil-rotary (1)ranil-rotary (2)

ஆனாலும் வடக்கு, கிழக்கில் மோதல் நிலவும் பகுதிகள், அரச நிர்வாகத்தின் கீழ் இல்லாமையால், அப்பிரதேசங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது நடைமுறைச்சாத்தியமற்ற விடயமென அந்த அதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள்.

அதனால், மோதல் நிலவும் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் பிள்ளைகளுக்கு, இந்தத் தடுப்பு மருந்தை பெற்றுக்கொடுக்க முடியுமென தெரிவித்தனர். ஆனாலும் ரோட்டரிக் கழக அங்கத்தவர்கள், அதற்கு இணக்கத்தைத் தெரிவிக்கவில்லை.

இந்தச் செயற்றிட்டத்திற்காக ரோட்டரிக் கழகத்தின் நிதி செலவு செய்யப்படுவதனால், அதனை நாட்டின் ஒரு பகுதிக்கு மாத்திரம் பயன்படுத்துவது பொருத்தமில்லையென தெரிவித்தனர். ரோட்டரி கழக அங்கத்தவர்களின் தலை குழம்பி விட்டதாக, அமைச்சின் அதிகாரிகள் உணர்ந்தார்கள்.

“இந்த நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெறுவது உங்களுக்குத் தெரியாதா? எமக்கு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆட்சியதிகாரம் இல்லை. எனவே நீங்கள் எமக்கு என்ன செய்யுமாறு கூறுகிறீர்கள்? அவர்கள் என்று வினவினர்.

அப்போது ரோட்டரி கழகத்தின் தலைவர் இரவீந்திரன், „அது குறித்துக் கவலைப்பட வேண்டாம். போர் குறித்து நாம் பார்த்துக் கொள்கிறோம் என்று பதிலளித்தார். இறுதியில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அவர்களுக்கு இணக்கம் தெரிவித்தனர்.

“உங்களால் போரை நிறுத்த முடியுமாயின், முழு நாட்டுக்கும் எம்மால் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு, இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்பு, ரோட்டரி கழகத்தின் தலைவர் இரவீந்திரன், தனது பணியகத்துக்கும், யுனிசெப் பணியகத்துக்கும் கிடைத்த கடிதமொன்றை எடுத்துக் கொண்டு வந்தார். அது, விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதமாகும்.

அதில், ”தேசிய நோய்த்தடுப்பு தினமன்று, உங்களது அரசாங்கம் ஆயுதங்களைக் கீழே வைப்பதற்குத் தயாரானால், நாமும் ஆயுதங்களைக் கீழே வைத்து, போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதற்குத் தயார்”  என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, போர்நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட்டது.

ஆயுதங்களை அவர்கள்  கீழே வைத்தனர். நாமும் எமது ஆயுதங்களைக் கீழே வைத்தோம். ரோட்டரி உறுப்பினர்கள், யுனிசெப், செஞ்சிலுவை மற்றும் ஏனைய சுகாதார செயற்பாட்டாளர்கள், ஜீப் வண்டிகளில் வெள்ளை கொடியைப் பறக்க விட்ட நிலையில், அது வரைக்கும் வடக்கு மற்றும் கிழக்கில்  எவரும்  செல்வதற்கு அஞ்சிய பிரதேசங்களுக்குச் சென்றனர்.

அந்த மோதல்கள் நிறுத்தப்பட்ட காலத்தின் பெறுபேறாக, போலியோ அற்ற இலங்கையொன்று எமக்குக் கிடைக்கப் பெற்றது. அந்தப் பதற்றமற்ற சில நாட்கள் மற்றும் தேசிய நோய்த்தடுப்பு தினம் என்பன, அதனை விடவும் அதிகமான ஏதோ ஒன்றை எமக்கு உணர்த்தியது.

எமக்கு எதிர்பார்ப்பொன்றைத் தந்தது. அது என்னவெனில், நாம் ஒருவருக்கொருவர் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் செயற்படும்போதுகூட, எமது பிள்ளைகள் மீது அன்பு வைத்துள்ளோம் என்பதாகும்.

உங்களது தலைவர் இரவீந்திரன் இல்லாவிடின், இந்த முயற்சி வெற்றி பெற்றிருக்காது. மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குத் தடுப்பு மருந்து வழங்குவதற்காக, போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்த அவர் சிறப்பான பணியை ஆற்றினார்.” என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *