மேலும்

பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் ரணில் ஆலோசனை

ranil-போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று, பாதுகாப்புச்செயலர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றி்யாராச்சி, கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா இராணுவத்தின், மேஜர் ஜெனரல் தர அதி்காரிகள் மற்றும் இறுதிக்கட்டப் போரில் பணியாற்றிய பிரிகேடியர் நிலையில் உள்ள முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது.

ranil-met- army

இந்தக் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர், போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும், அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும்  விசாரிக்கும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“இந்த ஆணைக்குழுவினால் தீர்க்கப்படமுடியாத  விடயங்கள், உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும்.

வெளிநாட்டு சட்டவாளர்கள், ஆலோசனைகளை வழங்குவார்கள். எனினும் அவர்கள் விசாரணைகளில் பங்கேற்கமாட்டார்கள்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எந்தவொரு அனைத்துலக அமைப்பினதும், அழுத்தங்களை நாடு எதிர்கொள்ளவில்லை.

ஆனால், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக விளக்கமளித்த சிறிலங்கா பிரதமர், போரின்போது சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *