மேலும்

தமிழ்நாட்டில் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம் – இரு தொகுதிகளில் ஒத்திவைப்பு

tamilnadu electionதமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு  இன்று வாக்களிப்பு நடைபெற உள்ளது.  இந்தத் தேர்தலில் போட்டியிடும் 3,728 வேட்பாளர்களின் தலைவிதியை, சுமார் 5.77 கோடி வாக்காளர்கள்  நிர்ணயிக்க உள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்களி்ப்பு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகள் தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கும் இன்று வாக்களிப்பு நடைபெறும்.

வாக்காளர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டதான அதிகளவு முறைப்பாடுகளையடுத்து, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில், தேர்தல் மே 23ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. சார்பில் விஜயகாந்த், பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பிலும் திமுக தலைவர் கருணாநிதி 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு இந்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளனர்.

இந்த தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியும் இதுதான்.

திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர்  தொகுதியில் போட்டியிடுகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தியாகராய நகர் தொகுதியிலும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விருகம்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.

வாக்களிப்புக்காக சுமார் 65,486 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு இலட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 75 ஆயிரத்து 900 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 58,201,620 வாக்காளர்கள் உள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், அங்குள்ள 468,113 வாக்காளர்களைத் தவிர்த்து, 57, 733,574 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

வாக்களிப்பு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததும், வாக்கு எண்ணும் இயந்திரத்தின் பொத்தான் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டு மூடப்படும். அதன்பின் இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

தமிழ்நாட்டில் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் காற்றுப்புகாத அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும். இந்த அறைகளைச் சுற்றி துணை இராணுவப் படையினர் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருப்பர்.

வாக்கு எண்ணும் பணி வரும் 19 ஆம் நாள் காலை 8 மணிக்குத் தொடங்கும். பிற்பகலுக்குள் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றால், வரும் 23ஆம் நாளும், திமுக வெற்றி பெற்றால், வரும் 21ஆம் நாளும், புதிய அரசு பதவியேற்புக்கு நாள் குறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *