மேலும்

சிறிலங்கா படைகளின் மே 18 போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு இல்லை

Victory_Dayபோர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

“முப்பதாண்டுப் போர் நிறைவுக்கு வந்ததை முன்னிட்டு, வரும் மே 18ஆமு் நாள் போர் வீரர்கள் நாள் நிகழ்வுகள், நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள ரணவிரு நினைவிடம் முன்பாக இடம்பெறும்.

இதில் சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த நிகழ்வுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவோ, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவோ அழைக்கப்படவில்லை.

போரில் இறந்த படையினரைக் கௌரவிக்கும் நிகழ்வு மாத்திரமே இம்முறை நடைபெறும். இந்த ஆண்டு போர் வெற்றி அணிவகுப்பு நடத்தப்படாது.

எதிர்வரும் காலங்களிலும், அதற்கு வாய்ப்பில்லை.போர் வெற்றி அணிவகுப்புகளுக்காக செலவிடப்படும் பணம், சேமிக்கப்பட்டு போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக செலவிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், ஆண்டு தோறும், மே 18ஆம் நாள் போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வந்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கடந்த ஆண்டிலும், இந்த இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்த போர் வெற்றி விழா கொண்டாட்டம், நல்லிணக்க முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற பரவலான விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த ஆண்டு குறைந்தளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *