மேலும்

காவல்துறை மீதான ஐ.நா நிபுணரின் குற்றச்சாட்டு – சிறிலங்கா விசாரணை

rajitha senaratneசந்தேக நபர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் மீது ஐ.நா நிபுணர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு அண்மையில் வந்த ஐ.நாவின் சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா அறிக்கையாளர், ஜுவான் மென்டஸ், தடுப்புக்காவலில் உள்ளவர்கள் சித்திரவதைகள் செய்யப்படுவது குறித்தும், காணாமற்போதல்கள் தொடர்வது குறித்தும் நம்பகமான சான்றுகள் கிடைத்திருப்பதாக, தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“ஐ.நா நிபுணர் ஜுவான் மென்டஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, அமைச்சரவையில் ஆராயப்பட்டதையடுத்து, இதுபற்றிய ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி ஒரு விசாரணையை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் மீள நடக்காது என்பது உறுதிப்படுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த விசாரணைகள் தொடர்பான மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.

அதேவேளை, உள்ளக காவல்துறை விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஒன்பது நாட்கள் சிறிலங்காவின் மேற்கொண்ட பயணத்தின் பின்னர், கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், கருத்து வெளியிட்டிருந்த ஐ.நா நிபுணர் ஜுவான் மென்டஸ், சந்தேக நபர்கள் பொல்லுகள், வயர்களினால் தாக்கப்படுவது, மணிக்கணக்கில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்படுவது, தலை கீழாக தொங்கவிடப்பட்டு, முகத்தில் பெற்றோல் பை கட்டப்படுவது போன்ற சித்திரவதைகள் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தார்.

சில சம்பவங்களில், சந்தேக நபர்களின் முகத்திலும் கண்களிலும் மிளகாய்த் தூள் வீசப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல்களும் இடம்பெற்றுள்ளன. பாலுறுப்பு பகுதியை சிதைத்தல், பாலுறுப்பு பகுதியில் மிளகாய்  அல்லது வெங்காய பசையை பூசுதல் போன்ற சித்திரவதைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *