மேலும்

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் – பகுதி: 2

sri-lankas-war-widows (3)

ஆவணப்படம்

தற்போதைய சூழலில் பெண்ணொருவர் தனியாக வாழ்வதென்பது கடலில் தத்தளிக்கும் படகிற்குச் சமானமாகும். குறிப்பாக, இந்தப் பெண்கள் தமது குடும்பப் பாரத்தைச் சுமக்கும் அதேவேளையில் தவறாக நோக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது.

சிறிலங்காவின் கலாசாரத்தில் குறிப்பாக வடக்கில் மறுமணம் என்பது பெரிதளவில் வரவேற்கப்படவில்லை. இதனால் வடக்கில் வாழும் கணவன்மாரை இழந்த பெண்கள் தமது வாழ்வைக் கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகுகின்றனர்.

வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்வி, பாலியல் மீறல்கள் மற்றும் மனஅழுத்தம் போன்ற பல்வேறு சுமைகளைத் தாங்க வேண்டிய சூழலிற்கு வடக்கில் வாழும் கணவனை இழந்த பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 1237 கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர்.  கணவனை இழந்த 4967 பெண்களில் 1442 பெண்கள் தமது கணவனை போரின் போது இழந்துள்ளனர். 40 வயதிற்குக் குறைந்த 985 பெண்கள் தமது குடும்பங்களைத் தலைமை தாங்கி நடத்துகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 13,000 குடும்பங்கள் பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ளனர்.

பரமேஸ்வரியின் கதை:

34 வயதான பரமேஸ்வரியின் கணவன் நிலக்கண்ணிவெடியில் அகப்பட்டு 2009ல் உயிரிழந்தார். நான்கு பிள்ளைகளின் தாயாரான பரமேஸ்வரி தனது வாழ்வைக் கழிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார். ‘எனது கணவர் இறந்த போது எனது கடைசிப் பிள்ளை பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்திருந்தன. எனது கணவர் மட்டுமே எமது குடும்பத்திற்கான தனியொரு உழைப்பாளி ஆவார். இவர் ஒரு மீனவர். நான் எனது 16வது வயதில் திருமணம் செய்தேன். எனது தந்தையாரும் மீன்பிடிக்கச் சென்ற போது இறந்து விட்டார்.

எனது கணவர் இறந்ததன் பின்னர், தனியாக எவ்வாறு வாழப்போகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. இதில் பல பிரச்சினைகள் இருந்தன. பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கும் என்னிடம் வசதி இருக்கவில்லை. நான் வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துபோனேன். ஆனாலும் பிள்ளைகளுக்காக வாழவேண்டிய நிலையில் இருந்தேன். 2010ல் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று எனக்கு உதவியது. தற்போது நான் இனிப்புப் பண்டங்களை விற்றுப் பிழைப்பை நடத்துகிறேன். ஆனாலும் இது போதுமான வருமானத்தைத் தரவில்லை. எனது மூத்த மகன் கூலித் தொழிலுக்குச் செல்கிறார்’ என பரமேஸ்வரி தெரிவித்தார்.

பரமேஸ்வரி பல்வேறு மன வடுக்களுடன் தனது வாழ்நாளைக் கழிக்கிறார். இவரது உறவினர்கள் இவருக்கு உதவினாலும் கூட, கணவன் மற்றும் தந்தை இல்லாமல் தனது பிள்ளைகளை வளர்ப்பதில் இவர் சிரமப்படுகிறார். இவர் மறுமணம் செய்து கொள்வதில் தனக்கு விருப்பமில்லை எனக் கூறினார்.

‘பிள்ளைகள் இருக்கும் போது மறுமணம் செய்ய நான் விரும்பவில்லை. எமது கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மறுமணம் செய்த போது அவரை ஊரார் தூற்றினார்கள். இவ்வாறான அவப்பெயர்களை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. மறுமணம் செய்வதால் எமது பிள்ளைகளும் பெரிதும் துன்பப்படுவார்கள். நான் திருமணம் செய்தால் இவர்கள் யார் கவனித்துக் கொள்வார்கள்?’ என பரமேஸ்வரி கேள்வி எழுப்பினார்.

இவ்வாறான ஒரு கோணத்திலேயே பரமேஸ்வரி மறுமணத்தை நோக்குகிறார். கணவனை இழந்த பெண்ணொருவர் மறுமணம் செய்வதில் தடைகள் ஏதும் உள்ளதா? மறுமணம் என்பது தமது மத மற்றும் கலாசாரங்களுக்கு எதிரானது என வடக்கில் வாழும் பெரும்பாலான கணவனை இழந்த பெண்கள் எண்ணுகின்றனர். இதனால் இவர்கள் மறுமணம் செய்யாது தொடர்ந்தும் தமது வாழ்வைத் துன்பத்துடனும் சுமையுடனும் கொண்டு செல்கின்றனர். இதற்கப்பால், தான் திருமணம் செய்யும் ஆண் நம்பிக்கையானவரா என்றும் இவரால் தனது பிள்ளைகளைப் பராமரிக்க முடியுமா எனவும் பெண்கள் ஆழமாக யோசிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்களில் 52 சதவீதமானவர்கள் மறுமணத்தை ஆதரிப்பதுடன், 42 சதவீதமானவர்கள் இது தொடர்பாக கருத்துச் சொல்ல மறுத்துள்ளனர் என யாழ்ப்பாண பெண்கள் அபிவிருத்தி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கூறப்படுகிறது. இவ்வாறான பெண்கள் தொடர்பில் தமிழ் சமூகம் மேலும் அனுதாபத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

சீதனம் என்பது இங்கு ஒரு பெரிய பிரச்சினையாகும். சீதனம் என்பது பலரது மறுமணத்திற்குத் தடையாக உள்ளதாக இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெண்களைப் பொறுத்தளவில் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதென்பது சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுவதற்குச் சமானமாகும். இவ்வாறான பெண்களுக்கு உள மற்றும் உடல் ரீதியான ஆற்றுப்படுத்தல்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். கணவன்மாரை இழந்த பெண்களுக்கு மட்டுமல்லாது, அவர்களது உறவினர்களுக்கும் இவ்வாறான விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

‘போரின் போது கணவனை இழந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் ஆவர். இவர்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவர்களுக்குத் தடையாகவுள்ள கலாசார வரையறைகள் தளர்த்தப்பட வேண்டும்’ என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சிவச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளடங்கலாக தமிழ் அரசியற் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கணவனை இழந்து வாழும் பெண்கள் மறுமணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரும் அறிக்கையை வெளியிட வேண்டும். ‘போர் உச்சமடைந்திருந்த போது, இந்தப் பெண்கள் வருவாய் ஈட்டினர். அத்துடன் தமது உறவினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தனர் எனவும் சிலர் பெருமை கொண்டனர்.

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இந்தப் பெண்கள் மனவடுக்களுக்கு ஆளாகியுள்ளனர். கணவனை இழந்த சில பெண்கள் விபச்சாரம், போதைப் பொருட்கள் மற்றும் தற்கொலை போன்றவற்றில் ஈடுபடுவதன் காரணம் என்ன என்பது தெளிவாகவில்லை’ என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் காரணமாக தமது இளவயதுகளில் திருமணம் செய்த பெண்களும் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளான பெண்களும் மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளனர்’ என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் உளமருத்துவரான கலாநிதி.சி.விஜேந்திரன் தெரிவித்தார்.

வடக்கில் பல இடங்களிலும் தற்போது விபச்சாரம் என்பது அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரையில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் துல்லியமான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

இவ்வாறான முடமாக்கப்பட்ட சமூக முறைமைக்குள் வாழும் பெண்கள் இவ்வாறான கெட்ட வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. வடக்கில் வாழும் பல ஆயிரக்கணக்கான கணவனை இழந்த பெண்களினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வை பணப்பைகளால் மட்டும் ஆற்றுப்படுத்த முடியாது.

ஆங்கிலத்தில்  – டிலிசா அபேசுந்தர
வழிமூலம்       – சண்டே லீடர்
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *