மேலும்

பனாமா ஆவணங்கள் – குற்றச்சாட்டை மறுக்கிறார் மேஜர் நிசங்க சேனாதிபதி

Major Nissanka Senadhipathiவெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தாம், வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார் அவன்ட் கார்டே பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பனாமா ஆவணங்களில், சிறிலங்காவைச் சேர்ந்த 65 பேரின் பெயர்களும், மேலும் பலரது முகவரிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்தப் பட்டியலில் அவன்ட் கார்டே பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, மற்றும் அந்த நிறுவனத்தின் பங்காளர்களான சேனாரத் பண்டார திசநாயக்க, பிரசன்ன அதானசியஸ் சிறிமேவன் ராஜரத்ன, கீத்சிறி மஞ்சுள குமார யாப்பா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

இவர்கள் நால்வரினது பெயர்களிலும், பிரிட்டிஸ் வேர்ஜின் தீவுகளில் 2012ஆம் ஆண்டில் இருந்து, வங்கிக் கணக்குகள் நடைமுறையில் இருப்பதாக பனாமா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில், மேஜர் நிசங்க சேனாதிபதியின் சட்டவாளர், நிசான் பிரேமரத்ன கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், வெளிநாடுகளில்  மேஜர் நிசங்க சேனாதிபதி பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை, அவரது சார்பில் மறுப்பதாக, சட்டவாளர் நிசான் பிரேமரத்ன குறிப்பிட்டார்.

ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளது போன்று, பனாமா ஆவணங்களில் ஒரு டொலரையேனும் தான் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால், அந்தப் பணம் முழுவதையும் கண்டுபிடித்தவருக்கே பரிசாக கொடுத்து விடுவதாகவும், மேஜர் நிசங்க சேனாதிபதி சார்பில் அவர் தெரிவித்தார்.

தாம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தமது நிறுவனம் பற்றி தகவல்களை வெளியிடும் போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *