மேலும்

சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்கின்றன- ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

Mónica-Pinto-and-Juan-E.-Méndez-சிறிலங்காவில் இப்போதும் சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சித்திரவதைகள் மற்றும், ஏனைய கோடூரமான, மனிதநேயமற்ற நடத்தைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் மற்றும், நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ,நா சிறப்பு அறிக்கையாளர் மொனிகா பின்ரோ ஆகியோர், சிறிலங்காவுக்கான பத்துநாள் பயணத்தின் முடிவில் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

“சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவடைந்திருக்கின்ற போதிலும், விசாரணைகளின் போது, உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சித்திரவதைகள் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரும், சித்திரவதைகளை தமது விசாரணைகளின் ஒரு வழக்கமான நடைமுறையாகவே பின்பற்றி வருகின்றனர்.

தேசியபாதுகாப்புக்கான உணரப்படாத அச்சுறுத்தல்கள் உள்ள சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள்,அதிகரித்துள்ளன. தீவிரவாத விசாரணைப் பிரிவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்.

புதிய, பழைய சம்பவங்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை தொடர்கிறது.

Mónica-Pinto-and-Juan-E.-Méndez-

காவல்துறை விசாரணையாளர்கள், சித்திரவதைகளையும், மோசமான வதைகளையும் மேற்கொள்வதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது.

சந்தேக நபர்கள் தடுப்பில் வைத்து, சித்திரவதை செய்யப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன.

தடுப்பு முகாம்கள், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், இராணுவ முகாம்களுக்கு சென்று பார்வையிட்டோம். தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தோம்.

அவர்களின் சாட்சியங்களின் உண்மையைக் காண முடிந்தது. அவர்களில் பலரில் உடல் ரீதியான சான்றுகளையும் காண முடிந்தது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக வேறு பொருத்தமான சட்டம், கொண்டு வரப்பட வேண்டும்.

கண்டபடி கைது செய்தல், சித்திரவதைகளை தடை செய்தல், மனிதநேயமின்றி  நடத்தப்படுவதை தடுத்தல் ஆகியவற்றுக்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

எமது பயணத்தின் கண்டறிவுகள், பரிந்துரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.இரண்டு மூன்று மாதங்களில், முழ அறிக்கையை சமர்ப்பிப்போம்.

அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எமது அறிக்கை கையளிக்கப்படும்” என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *