மேலும்

கவலைகள் தொடர்ந்தாலும் சிறிலங்காவின் மனித உரிமைகளில் முன்னேற்றம் – பிரித்தானியா

uk-flagகடந்த ஆண்டு சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில மனித உரிமைகள் கவலைகள் தொடர்வதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும், மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ள பிரித்தானியா, சிறிலங்காவின் ஒட்டுமொத்த மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் சாதகமான நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும்,  இனங்களுக்கிடையிலான பதற்றத்தை குறைத்திருப்பதாகவும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்களை உருவாக்கியிருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீண்டகாலக் குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காண்பதிலும் சிறிலங்கா அரசாங்கம் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பான ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளது.

அனைத்துலக சமூகத்துடன் ஆரோக்கியமாக இணைந்து செயற்படும் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா உதவிகளை வழங்கும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு, பரந்தளவிலான ஆதரவு வழங்கப்படும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சட்டத்தின் ஆட்சி, பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, போன்றவற்றிலும் சிறிலங்கா அரசாங்கத்துடன் பிரித்தானிய இணைந்து செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.