மேலும்

பீஜிங்கில் விரிக்கப்பட்ட செங்கம்பளம், கொழும்புத் துறைமுகத்தில் புளூ ரிட்ஜ்

ranil-lee-chinaஅமெரிக்க அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குப் பயணம் செய்ததானது முன்னர் முக்கியத்துவம் இல்லாத இலங்கைத் தீவு மீது அமெரிக்கா தற்போது அதிக ஆர்வம் கொண்டுள்ளதைச் சுட்டிநிற்கிறது.

இவ்வாறு டெய்லி மிரர் நாளிதழில், லசந்த குருகுலசூரிய எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது, அங்கே செங்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டதுடன் சிறிலங்காவுடன், எல்லாக் காலத்திலும் சீனா நட்புறவைத் தொடர்ந்தும் பேணும் என உறுதியளித்துள்ளது. இது தொடர்பில் தனது நல்லெண்ண சமிக்கையையும் சீனா ரணிலிடம் தெரிவித்துள்ளது.

2015ல் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காவின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது சீன எதிர்ப்புப் பரப்புரையை மேற்கொண்டிருந்ததுடன் சீன ஆதரவுத் திட்டங்களையும் எதிர்த்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், சிறிலங்காப் பிரதமர் அண்மையில் சீனாவிற்கான தனது பயணத்தை மேற்கொள்வதற்கு சில நாட்களின் முன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற சிறிலங்கா கடற்படை அதிகாரிகளின் பதவியேற்பு வைபவத்தின் போது ஆற்றிய உரையில் எதனை முக்கியப்படுத்தியிருந்தார் என்பதை இங்கு நோக்க வேண்டும்.

அதாவது பிரதமர் ரணில் தனது உரையில் ‘சிறிலங்கா கடற்படையானது மாலைதீவு தொடக்கம் மலாக்கா பாக்குநீரிணை வரையான அனைத்துலக வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்’ என அழைப்பு விடுத்திருந்தார்.  இவரது இந்தக் கூற்றானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் நிலவும் அமெரிக்க மூலோபாய நலன்களுடன் சிறிலங்காவும் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகின்றது என்பதைத் தெளிவாகச் சுட்டிநிற்கிறது.

பிரதமரின் இந்தக் கருத்தானது சிறிலங்கா அரசியல் ரீதியாக நடுநிலைப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது என்பதை நியாயப்படுத்த முடியாது. தனது படைகளை மீளவும் ஆசியா நோக்கி முன்னகர்த்துகின்ற அமெரிக்காவின் கோட்பாடானது இப்பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கைத் தடுக்கும் நகர்வாகும்.

‘இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக ஏற்கனவே இப்பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் தொடர்புகளைப் பேணி தலைமைத்துவப் பயிற்சிகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது’ என கடந்த மே மாதம் சிறிலங்காவிற்கான தனது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணத்தின் போது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சுட்டிக்காட்டியிருந்தார்.

அமெரிக்காவின் இந்த மூலோபாயத்திற்கு அமைவாகவே ஐ.தே.க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் செயற்படுவதில் ஆர்வம் காண்பிக்கின்றது. பலம்பொருந்திய அமெரிக்கா மற்றும் சீனக் கடற்படைகளின் அதிகாரப் போட்டிகளின் மத்தியில் சிறிலங்கா எப்பக்கம் ஆதரவளிக்கப் போகிறது என்பது இங்கு சவாலானதொரு விடயமாகும்.

அமெரிக்காவின் ஆலோசனைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தால் ஆசிய -பசுபிக் பிராந்தியத்தில் கூட்டு ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே சிறிலங்காக் கடற்படை அனைத்துலக கடற்பாதைகளைப் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் ரணில் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த மாதம் புதுடில்லிக்குப் பயணம் செய்த அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிசால் பரிந்துரைக்கப்பட்டவாறு யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான முத்தரப்புப் பேச்சுக்களில் இந்தியா பங்குகொள்ள மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்சீனக் கடலில் சீனாவை எதிர்த்து நிற்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்காகும். பிராந்திய சக்தியான இந்தியாவின் இப்போக்கிற்கு ஏற்ப சிறிலங்காவும் விரைந்து செயற்படுமா என்கின்ற அச்சம் நிலவுகிறது.

சிறிலங்கா கடற்படையினர் அனைத்துலக கடல் பாதைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இன்னமும் அதிகமான கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டும் என திருகோணமலையில் ஆற்றிய உரையின் போது விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்தானது உலகின் அதிசக்தி வாய்ந்த நாட்டின் இலக்குகளிற்கு ஆதரவளிப்பதற்காக சிறிலங்கா தனது இறையாண்மையை சரணடைய வைப்பதோடு மட்டுமல்லாது, இத்திட்டத்திற்கு சிறிலங்கா மானியம் வழங்க வேண்டும் எனவும் ரணில் எதிர்பார்க்கிறார் என்பதைக் குறிக்கிறதா? பிரதமரின் இந்தக் கூற்றானது சீனாவுடனான சிறிலங்காவின் உறவை ரணில் விரும்பவில்லை என்பதைக் குறிக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க ஆதரவுக் கோட்பாடுகள் சிறிலங்கா அதிபராலும் வரவேற்கப்படுகிறதா அல்லது சிறிலங்காவின் கூட்டணி அரசாங்கத்தின் கருத்தா என்பது இங்கு தெளிவற்றதாக உள்ளது. ஏனெனில் சிறிலங்காவின் அமெரிக்கா மீதான வெளியுறவுக் கோட்பாடுகள் தொடர்பாக நாட்டின் பிரதமர், அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இடத்திற்கு இடம் நேரத்திற்கு நேரம் வேறுபட்ட கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

எனினும், சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது மூலோபாய நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா என்கின்ற சந்தேகம் ஏற்படுகின்றது. கடந்த பெப்ரவரியில் அமெரிக்க இராணுவ சேவைகள் ஆணைக்குழுவில் அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதி ஹரிஸ் உரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் ‘சிறிலங்காவின் கேந்திர அமைவிடமே அமெரிக்கா அந்நாட்டுடன் தனது இராணுவ சார் உடன்படிக்கைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதில் ஆர்வங் கொள்வதற்கான பிரதான காரணமாகும். நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், அமெரிக்க பசுபிக் பிராந்தியக் கட்டளை மையமானது தனது இராணுவ தலைமைத்துவக் கலந்துரையாடல்களை விரிவுபடுத்துவதுடன், கடற்படை நடவடிக்கைகளையும் மேலும் அதிகரிக்கும். அத்துடன் இராணுவம் கலைக்கப்பட்டுள்ள மற்றும் சிறப்பான இராணுவச் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற இடங்களில் பாதுகாப்பு நிறுவகங்களை அமைப்பதிலும் கவனம் செலுத்தும்’ என அமெரிக்க பசுபிக் கட்டளை மையத்தின் நிறைவேற்றுத் தளபதி ஹரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

நிறைவேற்றுத் தளபதி ஹரிசின் இந்தக் கூற்றின் பிரகாரம், சிறிலங்கா இராணுவத்தைக் கலைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என சிறிலங்காப் பிரதமர் மீண்டும் மீண்டும் கூறுவதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க மீது அழுத்தம் இடப்படுகிறதா என்கின்ற கேள்வி இங்கு எழுகிறது.

இந்திய மாக்கடல் மார்க்கங்களைப் பாதுகாப்பதற்கும் ஐ.நா அமைதி காக்கும் படைகளிற்கும் உதவுகின்ற கெரியின் திட்டத்திற்கு ஆலோசனை வழங்குமாறுகடந்த ஆண்டில் கெரி சிறிலங்காவிற்கு வருகை தந்த போது சிறிலங்காவின் முப்படைகளின் கூட்டுத் தளபதியானது ஜகத் ஜெயசூரிய மற்றும் முப்படைத் தளபதிகளுக்கும் சிறிலங்காப் பிரதமர் கடிதம் மூலம் கோரியிருந்ததை நாம் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

2015ல் சிறிலங்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமும் சிறிலங்காப் படைகளைப் பலவீனப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். அமைதிக் காலத்தில் சிறிலங்காப் படையினரின் பணிகளை மீளவும் வரையறுக்க வேண்டிய தேவையுள்ள அதேவேளையில், தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வெளித்தரப்பினரின் தலையீடுகளின்றி இதனை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்காவில் அமெரிக்காவின் நலன்கள் எத்தகையது என்பது தொடர்பாக தெளிவான மூலோபாயம் வகுக்கப்பட்ட போதிலும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியைச் சேர்ந்த கட்டளைக் கப்பலான் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கொழும்பை வந்தடைந்தமை தொடர்பாக ஊடகங்களில் அதிகம் பேசப்படவில்லை. இவ்விரு நாடுகளினதும் இராணுவத் தளபதிகள் புளூரிட்ஜ் கப்பலில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இவர்கள் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவே கலந்துரையாடியதாக ஏழாவது கப்பற் படையணியின் தளபதி தெரிவித்தார். அதாவது இங்கு இராணுவ நடவடிக்கை என்பது கூட்டுப் பயிற்சிகளுக்கும் அப்பாற்பட்டதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் இப்போர்க் கப்பல் கொழும்பில் தரித்து நின்ற வேளையில் ‘இது இங்கு வரும் பல போர்க் கப்பல்களில் முதலாவது கப்பலாக இருக்கும்’ என அமெரிக்கத் தூதுவர் அற்றுல் கெசாப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். மார்ச் 26-31வரை சிறிலங்காவின் கரையில் தரித்து நின்ற இப்போர்க் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பார்வையிட்டிருந்தார்.

திருகோணமலையானது உலகின் மிகச் சிறந்த இயற்கையான ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகும் என கடந்த டிசம்பரில் சிறிலங்காவிற்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்த போது அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் தோமஸ் சனோன் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் தெரிவித்திருந்ததானது இங்கு மிகவும் முக்கியமானதாகும். அமெரிக்க அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக சிறிலங்காவிற்கான தமது பயணத்தை மேற்கொண்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குப் பயணம் செய்ததானது முன்னர் முக்கியத்துவம் இல்லாத இலங்கைத் தீவு மீது அமெரிக்கா தற்போது அதிக ஆர்வம் கொண்டுள்ளதைச் சுட்டிநிற்கிறது.

‘அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் போர்க் கப்பலிற்கு திருகோணமலையிலுள்ள இயற்கைத் துறைமுகமான திருகோணமலையை விட வேறு சிறந்த தளம் கிடைக்குமா?’ என லங்கா சமசமஜாக் கட்சியின் தலைவர் திஸ்ஸ  விதாரண தெரிவித்திருந்தார். அதாவது திருகோணமலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆற்றப்பட்ட உரைக்குப் பதிலாக இவர் இதனைத் தெரிவித்திருந்தார். ‘பிலிப்பீன்ஸ் மற்றும் வேறு நாடுகளைப் போல சிறிலங்காவும் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறும்’ என திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

‘திருகோணமலையைத் தளமாகப் பயன்படுத்தும் ஏழாவது கப்பற்படையணிக்கு ஆதரவாக மிகவும் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்காவிட்டால் சிறிலங்கா எவ்வாறு அனைத்துலக கடல் மார்க்கத்தைப் பாதுகாக்கும்?’ என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தற்போது அமெரிக்கா தனது வெளிநாட்டு நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பிறநாடுகளுடன் இராணுவ தொழிலை விட சுதந்திரமான பல உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே சிறிலங்கா அமெரிக்காவுடனான இராணுவ உடன்படிக்கைகளின் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். அதாவது இந்த உடன்படிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவுடன் இராணுவ உபகரணங்கள் சார்ந்த உடன்படிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்வதற்கு பத்து ஆண்டுகள் எடுத்தது. அதாவது இரண்டு நாடுகளும் தமது இராணுவ வளங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் இவற்றைப் பழுதுபார்ப்பது போன்றவற்றுக்கான உடன்படிக்கைகளை எட்டுவதற்கு பத்து ஆண்டுகள் எடுத்தன.

இந்நிலையில் சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கமானது அணிசேரா அமைப்புடன் உதட்டளவு மரியாதையைத் தொடரும் இந்த வேளையில், இதன் குழப்பம் நிறைந்த மங்கலான திரையின் பின்னால் சிறிலங்காவின் கோட்பாடுகள் குழிதோண்டிப் புதைக்கப்படும் ஆபத்தை நெருங்கியுள்ளது.

2 கருத்துகள் “பீஜிங்கில் விரிக்கப்பட்ட செங்கம்பளம், கொழும்புத் துறைமுகத்தில் புளூ ரிட்ஜ்”

  1. puviraj says:

    நவகாலணித்துவமோ????????

  2. Mahendra Thiru Mahesh
    Mahendra Thiru Mahesh says:

    நவகாலணித்துவமோ???????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *