மேலும்

தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் சிறிலங்கா அதிபர் – அனைத்துலக ஊடகம்

maithriசிறிலங்காவின்  அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் வாக்குறுதியை வழங்கியிருந்தாலும் கூட, அந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கெட்டவாய்ப்பாக இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

நிலையான நீதி மற்றும் அது தொடர்பான மறுமலர்ச்சி தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது மிகப் பாரியளவில் உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் கூட, அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படப் போவதில்லை. 2015 ஒக்ரோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட, சிறிலங்கா அரசாங்கமானது இது தொடர்பில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்தும் காத்திரமான பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறார். இவை பெரும்பாலும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளன.  மங்கள சமரவீர இந்த நாட்டை நிர்வகிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

சிறிலங்காவின் நீதி நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவது தொடர்பான மங்கள சமரவீரவின் கருத்துக்கள் சிறிலங்காவின் அதிபர், பிரதமர் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்களின் பேச்சுக்களில் முன்வைக்கப்படவில்லை.

உச்சளவிலான ஊழல் மோசடி வழக்குகள், நிலையான நீதி போன்றவற்றுடன் தொடர்புபட்ட அரசியல் மாற்றத்தை நாட்டில் அமுல்படுத்துவதற்கான இயலுமையை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும். அனைத்துலக சமூகத்தின் தொழினுட்ப உதவியையும் சிறிலங்கா பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அனைத்துலக நாடுகளின் பங்களிப்புடன் நாட்டில் பாரிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வம் காண்பிக்கவில்லை.

இந்நிலையில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மிகவும் கரிசனையுடன் நிறைவேற்றுமா? இதற்கான செயற்பாடுகளை இது முன்னெடுக்கின்றதா? சிறிலங்காவின் அதிபர் சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தம்மால் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகளைச் செயல்வடிவம் ஆக்குவார்களா?

தனது நாட்டில் உண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்கவே சிறிலங்கா விரும்புகிறது. ஆனால் இன்னமும் சிறிலங்காவில் தமிழ் அரசியற் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கமானது தனது நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைக்க வேண்டுமாயின் அரசியற் கைதிகளை விடுவிக்கவோ அல்லது இவர்கள் மீதான வழக்குகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.  தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமானது போர் சார்ந்த ஒன்று எனினும் இது தொடர்பாக சிறிலங்கா தனது தெளிவான தீர்வை முன்வைக்க வேண்டும்.

யுத்த கால மீறல்களுக்குப் பொருத்தமான உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவா அல்லது பொறுப்பளிக்கும் பொறிமுறையை உருவாக்குவதா? அல்லது இராணுவத்தின் உயர் நிலைத் தளபதிகளுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்வதா? என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது தீர்வை முன்வைக்க வேண்டும்.

இதேபோன்று தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாகவும் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டைக் காண்பிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்வொன்றை எட்டாதவிடத்து நாட்டில் நிச்சயமற்ற தன்மையும் நிலைத்திருக்கும். இதுவரை கால சிறிசேனவின் ஆட்சியை நோக்குவோமாயின், இவர் சிங்கள தேசியவாதிகளின் நம்பிக்கையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளார் என்பது மறுப்பதற்கல்ல.

வழிமூலம்         –  Huffington post

ஆங்கிலமூலம் – Taylor dibbert

மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *