மேலும்

சீனாவைத் தழுவும் சிறிலங்கா – அதிகரிக்கும் பிராந்திய புவிசார் அரசியல் ஆபத்து

maithri-xi (3)சிறிலங்காவின் குறுகிய கால சீன எதிர்ப்புக் ‘கலகமானது’, சீனாவை எதிர்த்தால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு சிதைவுறும் என்கின்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் சான்றாகக் காணப்படுகிறது.

இவ்வாறு ஜப்பானின் Nikkei Asian Review ஊடகத்தில் HIROYUKI AKITA எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சீனாவானது சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி தொடர்பாக சிறிலங்கா மீளவும் ஆராய்ந்து தீர்க்கமானதொரு முடிவை எட்டியுள்ளது. இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள இலங்கைத் தீவானது ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தங்கிச் செல்கின்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், சீன ஆதரவு வெளியுறவுக் கோட்பாட்டைக் கைவிடுவதென சிறிலங்கா தீர்மானித்திருந்தது. சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கினால் எழுந்த அச்சமே சிறிலங்காவின் இத்தீர்மானத்திற்குக் காரணமாகும். எனினும், சிறிலங்காவின் இந்த முடிவானது ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு வாய்ப்பாக மாறியிருக்கலாம்.

அண்மைய சில ஆண்டுகளாக சீனாவால் முன்னெடுக்கப்படும் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு சீனாவால் சிறிலங்கா மிகப் பாரியதொரு மூலோபாய மையமாக மாற்றப்படுகிறது. சீனாவின் இந்திய மாக்கடல் நோக்கிய நகர்வை அமெரிக்கக் கடற்படை கண்காணித்து வருகிறது.

இதன் காரணமாக சீனா தனது திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு கரையோர நாடுகளில் துறைமுகங்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் அமெரிக்காவின் கண்காணிப்பிலிருந்து தனது கடல் சார் நகர்வுகளை மறைப்பதே சீனாவின் பாரியதொரு நோக்காகும்.

சீனாவைப் பொறுத்தளவில், கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தின் மத்தியில் சிறிலங்கா அமைந்துள்ளதால் இது மிகவும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க மையமாக அமைந்துள்ளது.

இடைநிறுத்தப்பட்டிருந்த சீன முதலீட்டுத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கு சிறிலங்காவானது ஜனவரி நடுப்பகுதியில் தனது பச்சைக்கொடியைக் காண்பித்ததானது சீனாவிற்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான வரவேற்பாகும். கொழும்பின் கரையோர நிலத்தைக் கையகப்படுத்தி அதில் வர்த்தக, குடியிருப்பு மற்றும் விளையாட்டு வசதிகளுடன் 1.5 பில்லியன் டொலர் செலவில் திட்டம் ஒன்றை மேற்கொள்வதென சீன நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நிர்மாணப் பணிகள் செப்ரெம்பர் 2014ல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்டது. கொழும்பு நகரத் திட்ட உடன்பாட்டில் ஏற்பட்ட சில நடைமுறைப் பிரச்சினைகளே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரமானது நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறிலங்காவின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமே சீனா நோக்கிய சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாடு மாறுவதற்குக் காரணமாகும். சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பானது சீன சார்பு ஆட்சியை நடத்திய மகிந்த ராஜபக்ச தனது அதிபர் பதவியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

தேர்தல் பரப்புரையின் போது, சீன நிறுவனங்கள் மகிந்த தொடர்புகளைப் பேணுவதாகவும் இதனால் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தார்.  இவர் தனது தேர்தல் பரப்புரையின் போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக, சீனாவின் திட்டத்தை இடைநிறுத்துமாறு அறிவித்தல் விடுத்தார். சிறிசேனவின் இந்த அறிவிப்பானது சீனாவின் இராணுவ மற்றும் மூலோபாய உதவிகளை சிறிலங்கா இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளும் என ஆய்வாளர்கள் கருதினர்.

ஆனாலும் மீண்டும் சீன முதலீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கான அனுமதி ஒரு ஆண்டின் பின்னர் வழங்கப்பட்டது. சிறிசேன தனது சீன எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டு மீண்டும் சீனாவுடன் கைகோர்த்துள்ளார்.

‘சிறிலங்காவின் சீனா தொடர்பான நிலைப்பாடு முற்றுமுழுதாக மாறியுள்ளது. மேற்கில் சிறிலங்கா மீது இறுக்கமான நிலைப்பாடுகள் இடப்பட்டுள்ள நிலையில் எமக்கு வேறு யார் நிதி வழங்குவர்?’ என   சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் கேள்வி எழுப்பியிருந்ததாக பெப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்ட ரொய்ட்டர்ஸ்  ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதான துறைமுகம் காணப்படும் சிறிலங்காவின் தெற்கில் சிறப்புப் பொருளாதார வலயம் ஒன்றை அமைத்து அதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை சீன வர்த்தகர்கள் எதிர்பார்த்திருப்பதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியிருந்தது. சிறிலங்காத் துறைமுகங்களை சீனா தனது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

‘நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் தமது சொந்த நிதியை முதலீடு செய்வார்கள்’ என சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்காவின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி ஏற்றுமதிகள்  மந்த நிலையை அடைந்துள்ளன.  சிறிலங்காவின் வெளிநாட்டு நாணயமாற்றும் தொடர்ச்சியாகத் தளம்பல் நிலையிலேயே காணப்படுகிறது.

இந்நிலையில் சீனாவுடன் பகையை வளர்த்துக் கொள்வது முட்டாள்தனமானது என்பதை சிறிசேன உணர்ந்து கொண்டார். சீனாவும் இப்பொன்னான வாய்ப்பைப் பற்றிப்பிடித்துள்ளது.

பெப்ரவரி 06 அன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி கொழும்பு விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 21ம் நூற்றாண்டிற்கான கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தை அமுல்படுத்துவதில் சீனாவானது சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு இரண்டு நாட்களின் முன்னர், அதாவது பெப்ரவரி 04 அன்று சீன அதிபர் ஜி சின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கெகியாங் ஆகியோர் சிறிலங்காவின் சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியை அதன் தலைவர் சிறிசேன உட்பட சிறிலங்காத் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுப்பங்களிப்பை உருவாக்குவதற்கான அழைப்பை சீனத் தலைமை விடுத்திருந்தது.

இதேவேளையில், தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளுக்கான அடிப்படைக் கட்டுமான வசதிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த நகர்வை எதிர்த்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியன ஏனைய ஆசிய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.

ஆனால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியன இந்த முயற்சியில் வெற்றியடைந்துள்ளனவா என்பது தெளிவற்றதாகவே காணப்படுகிறது. ஏனெனில் இந்த ஆசிய நாடுகள் சீனாவிடமிருந்து பொருளாதார நலன்களைப் பெறும் அதேவேளையில், சீனாவின் இராணுவப் பலப்படுத்தல்களை எதிர்த்து நிற்கின்றன.

சிறிலங்காவின் குறுகிய கால சீன எதிர்ப்புக் ‘கலகமானது’, சீனாவை எதிர்த்தால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு சிதைவுறும் என்கின்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் சான்றாகக் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *