மேலும்

சுவிஸ்- லொசான் மாநகரசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார் ஈழத்தமிழர் நமசிவாயம்

Namasivayamலொசான் மாநகரசபைக்கு நேற்று (பெப்ரவரி 28) நடைபெற்ற தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.

தம்பிப்பிள்ளை நமசிவாயம்  9,833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில், நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார். இது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4,020 வாக்குகள் அதிகம்.

இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவருக்கு 10,001 வாக்குகள் கிடைத்திருந்தன. மேலும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருப்பார்.

இந்தத் தேர்தலில் இவரது வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்குகளே உறுதுணையாக இருந்துள்ளன. சுமார் 80 வீதமான தமிழ் மக்களே இம்முறை வாக்களித்துள்ள நிலையில், எஞ்சிய 20 வீதமானோரும் வாக்களித்திருத்தால் இந்தச் சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கும்.

2007 ஆம் ஆண்டு முதல் மாநகரசபை உறுப்பினராக இருந்துவரும் நமசிவாயம் கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில் 5,813 வாக்குகளைப் பெற்று பட்டியலில் 18 ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, இந்தத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் ஒட்டுமொத்த வாக்குவங்கியுமே அதிகரித்துள்ளது.

கடந்த முறை லொசான் மாநகர சபையில் 29 உறுப்பினர்களைப் பெற்றிருந்த இந்தக்கட்சி,  இம்முறை 4 உறுப்பினர்களை அதிகமாகப் பெற்று 33 இடங்களைச் சுவீகரித்துள்ளது.

அதேவேளை, வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் வாங்கு வங்கி சரிவு கண்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான வாக்கெடுப்புக்கு இந்தக் கட்சி அழைப்பு விடுத்திருந்த நாள் முதலாக இக்கட்சியின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *