மேலும்

லசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

lasantha_murderசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 40இற்கும் அதிகமான அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த சில வாரங்களுக்குள், 40இற்கும் அதிகமான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலை நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே, கூட்டு நடவடிக்கைப் பணியகத்துக்கு அது பற்றிய தகவல் கிடைத்திருந்ததாக, அங்கு பணியாற்றிய முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலராக முன்னர் பணியாற்றியவரிடமும் இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது.

அத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரிடமும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும், மற்றொரு தகவல் கூறுகிறது.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்திலேயே இந்தப் படுகொலை இடம்பெற்றது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரவு அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை இடம்பெற்றதாகவும், அவர்கள் பின்னர் சேவையில் இருந்து நீக்கப்பட்டதாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *