மேலும்

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டவர்கள் பங்கேற்கலாம் – அமெரிக்காவில் மங்கள சமரவீர

mangala-usசிறிலங்காவில் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில் நேற்றுப் பிற்பகல் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடனான சந்திப்பையடுத்தே, மங்கள சமரவீர இங்கு உரையாற்றியிருந்தார்.

போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்றும் வெளிநாட்டவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் முன்னர் கூறியிருந்தார்.

mangala-us

இந்தநிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இதுபற்றி, அமெரிக்க நிறுவகத்தில் ஆற்றிய உரையில்,

“அது சிறிலங்கா அதிபரினது கருத்து மட்டுமே.

முன்னைய அரசாங்கத்தினால் அரசியல்மயப்படுத்தப்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக சிறிலங்காவின் நீதித்துறையின் சுதந்திரமும், நம்பகத்தன்மையும் சீரழிக்கப்பட்டன.

தற்போது சிறிலங்காவின் நீதித்துறை சரியான பாதைக்குத் திரும்பியிருக்கிறது. நம்பகத்தன்மையை பெறுவதற்கு அதற்கு சற்று காலஅவகாசம் தேவைப்படும்.

போர்க்குற்ற விசாரணை விடயத்தில், வெளிநாட்டு நீதிபதிகள், தடயவியல் நிபுணர்கள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்குத் தொடுனர்களின்  பங்களிப்புத் தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.

நாம் எல்லா வாய்ப்புகள் குறித்து கவனத்தில் கொள்கிறோம்.

நாம் அமைக்கும் நீதிமன்றம் நம்பகமானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவில்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

சிறுபான்மை தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னர், சிறப்பு நீதிமன்றத்துக்கான வரையறைகள் இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் முடிவு செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *