மேலும்

குடாநாட்டு மக்களை மிரள வைத்த மிக் போர் விமானங்கள் – வழக்கமான பயிற்சி என்கிறது விமானப்படை

MIG-27சிறிலங்கா விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் கடந்தவாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது பறந்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்திய நிலையில், அது ஒரு வழக்கமான பயிற்சி நடவடிக்கை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், சிறிலங்கா விமானப்படையின் மிக் 27 ஜெட் போர் விமானங்கள் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் தாழப் பறந்து சென்றன.

விமானங்களின் ஜெட் இயந்திரத்தில் இருந்து  குண்டுவெடிப்பு போன்ற பாரிய அதிர்வுச் சத்தம், கேட்டதால், குடாநாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

யாழ். இந்து ஆரம்பபாடசாலை மாணவர்கள் பயத்தில் நடுங்கினர். தாக்குதல் நடக்கிறதோ என்ற அச்சத்தில், ஆசிரியர் ஒருவர், மாணவர்களை நிலத்தில் படுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

தோட்டங்களில் நின்ற விவசாயிகளும், அதிர்ந்து போய் நின்றனர். வீதியில் சென்ற வாகன ஓட்டிகள் தமது வாகனங்களை நிறுத்தி விட்டு வானத்தைப் பார்த்தனர்.

அவர்களுக்கு போர்க்காலங்களில் ஜெட் போர் விமானங்கள் நடத்தி தாக்குதல்களின் நினைவுகள் மீண்டும் ஒருமுறை வந்து சென்றது.

இந்த நிலையில், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து மேற்கொண்ட வழக்கமான போர்ப் பயிற்சி ஒன்றுக்காகவே விமானப்படையின் மிக்-27 போர் விமானங்கள் யாழ். குடாநாட்டின் மீது பறந்ததாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சிகள் தற்போது முடிந்து விட்டதாகவும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *