மேலும்

சிறிலங்காவுக்கு உதவ வேண்டும் – ஒஸ்ரியாவிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை

ms-austria (1)சிறிலங்காவில் நீண்டகாலப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழப்புகளையும் சீராக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உதவ வேண்டும் என்று ஒஸ்ரிய அதிபரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஜேர்மனிக்கான அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னா சென்றார். அங்கு அவருக்கு உயர் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஒஸ்ரிய அதிபர் ஹெய்ன்ஸ் பிஸ்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, “சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுகாலப் போரினால், ஏற்பட்ட இழப்புக்களையும் வடுக்களையும் மீளமைத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளின் உதவி எமக்கு மிகவும் அவசியம்.

ms-austria (1)ms-austria (2)

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

அதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது . இதற்கு நட்பு நாடான ஒஸ்ரியா உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணக்கப்பாடு கண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதித் தடை நீக்கம், மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஒஸ்ரியா சாத்தியமான உதவிகளை வழங்கும் என்றும் அந்த நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், மேலும் வலுப்பெறும் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *