மேலும்

இந்தியாவின் சார்க் செய்மதித் திட்டத்தில் இணைய உறுப்பு நாடுகள் அச்சம் – சிறிலங்கா மட்டும் ஒப்புதல்

Indiaஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சார்க் செய்மதித் திட்டத்தில், இணைந்து கொள்ள சிறிலங்கா மட்டுமே இணக்கம் தெரிவித்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த 18ஆவது சார்க் உச்சி மாநாட்டில், சார்க் நாடுகளுக்கான செய்மதித் திட்டம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒரு ஆண்டு கழிந்து விட்ட போதிலும், சிறிலங்கா மட்டும் இதில் இணைந்து கொள்வதற்கு அதிகாரபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளது.

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய ஆறு நாடுகளும், கொள்கையளவில் தான் இதற்கு இணங்கியுள்ளதாக, இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் அதிகாரபூர்வமாக இணைந்து கொண்டால், சார்க் நாடுகள் மத்தியில் இந்தியா அரசியல் ரீதியாகவும்,  விஞ்ஞான ரீதியாகவும், மேலாதிக்கம் செலுத்தும் என்று உறுப்பு நாடுகள் மத்தியில் அச்சம் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சார்க் செய்மதி  மூலம், பாகிஸ்தானின் உணர்வுபூர்வமான தரவுகளை இந்தியா பெற்றுக் கொண்டு விடும் என்று பாகிஸ்தான் அச்சம் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் அரை அரசியல்  விண்வெளித் திட்டம், 2016 இறுதியில் அல்லது 2017துவக்கத்தில் தற்காலிகமாக நிலை நிறுத்தப்படும்.

ஏனைய நாடுகள் இணைந்து கொள்ளாவிட்டாலும் கூட இந்த செய்மதி ஏவப்படும். ஆனால், வரையறுக்கப்பட்ட நோக்கங்களுடனேயே செயற்படும். இந்த செய்மதிக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

235 கோடி ரூபா பெறுமதியான இந்த திட்டத்தில், ஏனைய ஆறு நாடுகளும் இணைந்து கொள்ளும் என்று நம்புவதாகவும், அந்த நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு தொடர்பு கொண்டிருப்பதாகவும், இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு, அனர்த்த முகாமைத்துவம், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில், இந்த செய்மதியை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *