மேலும்

வடக்கின் அபிவிருத்தி குறித்து முழுமையான ஆய்வு – ரணில் – விக்கி சந்திப்பில் முடிவு

ranil-cm-pongal (3)வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக முழுமையான ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் மாகாண அதிகாரிகள் நேற்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்வை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் ஆளுனர் பாலிஹக்கார, பிரதம செயலர் பத்திநாதர் , ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், திறைசேரியின் முன்னாள் செயலர் பாஸ்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்றுமாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்த விபரங்களை சிறிலங்கா பிரதமரிடம் சமர்ப்பித்து விரிவாகக் கலந்துரையாடியதாக விவசாய அமைச்சர் ஐங்கநேசன் தெரிவித்தார்.

வெளிநாட்டு உதவிகளைப் பெறும் போது வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் குறித்து எடுத்துக் கூறியதாகவும்,  வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக முழுமையான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தச் சந்திப்பில், முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபா உதவித் தொகையை இரட்டிப்பாக் வேண்டும் என்றும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் முதலமைச்சரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *