மேலும்

சிறிலங்காவில் புலனாய்வு இதழியலை ஊக்குவிக்க 5 இலட்சம் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா

eagle-flag-usaபுலனாய்வு இதழியலை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பவும், சிறிலங்காவில் உள்ள ஊடக அமைப்புகளுக்கு, அமெரிக்கா ஐந்து இலட்சம் டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சிறிலங்கா ஊடகங்களின் ஆற்றலையும், அதிகரிப்பதும், புலனாய்வு இதழியலை வலுப்படுத்துவதுமே, இந்தப் பாரிய கொடையின் நோக்கம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நிதியுதவி, ஊடகவியலாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படாது. இந்த நோக்கங்களுக்கு உதவும் நோக்கில் செயற்படும், ஊடக அமைப்புகளுக்கே வழங்கப்படும்.

பல்வேறு ஊடகங்களிலும், ஊடகவியலாளர்களின், அறிக்கையிடும் தரத்தையும், பக்கசார்பின்மையையயும், கட்டியெழுப்பும் நோக்குடன் செயற்படும், ஊடக அமைப்புகளிடம் இருந்து, இந்த நிதியுதவியைப் பெறுவதற்கான செயற்திட்டங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரிவு கோரியிருக்கிறது.

நீண்டகால உறுதிப்பாட்டுக்கு  ஊடகங்களுக்கான பயிற்சி மற்றும் உதவி வழங்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஊடக ஆசிரியர்களுக்கு, முன்னேற்றகரமான இதழியல் தொடர்பான பயிற்சிகளை அளிக்கவும், புலனாய்வு இதழியலை ஊக்குவிக்க எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும், இதழியலின் தரத்தை உயர்த்த எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது குறித்தும் ஊடக  ஆசிரியர்கள் மற்றும் ஊடக உரிமையாளர்களுடன் வட்டமேசை கலந்துரையாடலை நடத்தவும், யோசனைகளை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளின் முக்கிய விளைவாக, நல்லிணக்கம் , இடைக்கால நீதி செயற்பாடுகள் குறித்த செய்திகள் அதிகரிப்பதாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள், வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடகவியலாளர்களையும், அமைப்புகளையும், இணைந்து பயிற்சியளிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும், பெண் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *