மேலும்

தேஜஸ் போர்விமான கொள்வனவு குறித்து முடிவு எடுக்கவில்லை – சிறிலங்கா விமானப்படை

Tejas jetஇந்தியாவிடமா, பாகிஸ்தானிடமா அல்லது வேறு நாட்டிடம் இருந்தா போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநொட்டிக்கல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பலநோக்கு இலகு போர் விமானமான, தேஜஸ் போர் விமானங்களை சிறிலங்கா கொள்வனவு செய்யக் கூடும் என்று இன்ரநசனல் பிஸ்னஸ் ரைம்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தி குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேஜஸ் போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் முதல் ஏற்றுமதி வாடிக்கையாளர் என்ற நிலையை சிறிலங்கா பெறலாம் என்றும், இந்தப் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர்,

“மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களுக்குப் பதிலான போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான, சாத்திய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறோம்.

எம்முன் பல தெரிவுகள் இருக்கின்றன. ஆனால் எதனைக் கொள்வனவு செய்வதென்று முடிவு செய்யவில்லை.

தேஜஸ் மற்றும் ஜே.எவ்-17 போர் விமானங்கள் பிராந்திய விமானங்கள். ஏனையவை, ஐரோப்பிய  நாடுகளின் விமானங்கள். இதுபற்றி முடிவெடுக்க காலஎல்லை ஒன்றும் நிர்ணயிக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பாகிஸ்தானின் ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு புதுடெல்லி இராஜதந்திர ரீதியான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *