ஆக்ராவில் இருந்து மாத்தறை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க இந்தியா திட்டம்
இந்தியாவின் ஆக்ராவில் இருந்து சிறிலங்காவின் மாத்தறை வரை தேசிய நெடுஞசாலை ஒன்றை அமைக்கும் புதிய திட்டத்தை இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை, 96ஆயிரம் கி.மீற்றர்களில் இருந்து இரண்டு இலட்சம் கி.மீற்றர்களாக அதிகரிக்கும் திட்டத்தை, நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாகவே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரத்தையும், சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மாத்தறை நகரத்தையும், இணைக்கும் 3024 கி.மீ நெடுஞ்சாலையை அமைக்க திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
ஆசிய நெடுஞ்சாலை- 43 ( ஏ.எச்-43) என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இந்த நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்கிறது.
ஆக்ராவையும் மாத்தறையையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை, குவாலியர், நாக்பூர், ஹைதராபாத், நெல்லூர், சென்னை, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களை இணைத்து அமைக்கப்படும்.
நாகப்பட்டினம் தொடக்கம், மாத்தறை வரையான இந்த நெடுஞ்சாலை பயணிகள் கப்பல் மூலம் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.