மேலும்

விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

zeid-colombo-press (1)சிறிலங்காவின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதாக, நம்ப முடியாததாக, நிலையற்றதாக இருப்பதால் தான், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான பயணத்தின் முடிவில் இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னைய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட வேளை காணப்பட்டதை விட,  தற்போது அதிகளவு நட்புறவான சூழல் காணப்படுகிறது.

கடந்த ஓரு ஆண்டில் சிறிலங்கா  முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளது, ஊடகங்களுக்கு இது நன்கு தெரியும். நீங்கள் விரும்பியதை எழுதுவதற்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அச்சமான சூழ்நிலை கொழும்பிலும் தெற்கிலும்  கணிசமாக குறைந்துள்ள போதும், வடக்கு, கிழக்கில் அது உருமாற்றமடைந்துள்ளது, ஆனால் துரதிஸ்டவசமாக அது இன்னமும் தொடர்கிறது.

முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அனைவரும்  ஏற்றுக் கொள்கின்ற போதிலும் இந்த முன்னேற்றத்தின் அளவு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

zeid-colombo-press (2)

வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகள் குறைவடைந்துள்ள போதிலும், புதிய முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு மயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர நாளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது சிறந்த விடயம். அது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்.

மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்புக்களை வழக்க வேண்டும்.

போரின்போது சிறிலங்கா இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினாலும் பொதுமக்கள் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை, எனது பயணத்தில் கண்டறிய முடிந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

போரில்  பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு  உதவ  சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.

சிறிலங்கா இராணுவம் பொதுமக்களின் நிலங்களை மீள கையளிப்பதை துரிதப்படுத்த வேண்டும்.

நாட்டில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறைபிடிக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாட்டுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக அமையாது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து தான் வழங்கிய வாக்குறுகளில் இருந்து பின்வாங்குகிறது என்ற அச்சத்தை பலர் என்னிடம் வெளியிட்டிருந்தனர்.

எனினும் இன்று காலை சிறிலங்கா அதிபரும், பிரதமரும்  தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.

ஜெனிவா தீர்மானம் குறித்து பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன, இலங்கையர்கள் தீர்மானத்தை புரிந்து கொள்ளவேண்டும்,  அவர்கள் கடந்த காலங்களின் பயங்கரங்களை எதிர்கொண்டு அவற்றை தோற்கடிக்க வேண்டும் .

சிறிலங்காவில் மிகச் சிறந்த நீதிபதிகள், சட்டவாளர்கள், நீதியை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுகளாக நீதிப் பொறிமுறை அதிகளவு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக, நிலையற்றதாக, நம்பமுடியாததாக உள்ளது.

கடந்த சில பத்தாண்டுகளாக நாட்டின் வரலாற்றில் நீதித்துறையின் தோல்விகள் பரவிக் கிடக்கின்றன. கிட்டத்தட்ட அனைவரும் இதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

கடந்த ஜனவரி 27ஆம் நாள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைப் பற்றி மிகப் பெரியளவில் உரையாற்றியது போற்றத்தக்கது.

விசாரணைகளின் தோல்விகள் குறித்து, நீதிமன்ற அறையினுள் அத்துமீறி நுழைந்தது குறித்து, தண்டனை விதிக்கப்படாத குற்றங்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் செய்திகள் வெளியாகின்றன.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள் பரவலாக காணப்படுகின்றன. அவற்றுடன் தொடர்புடையவர்களாக பெருமளவில் சிறிலங்கா படைகளில் அங்கம் வகிப்போரே இருக்கின்றனர்.

இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட அனைத்துலக குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு பரிந்துரைக்கப்பட்டமைக்கு இவையே காரணம்.

இது நடைமுறைப் பிரச்சினைகளுக்கு, தீர்வுகாணக் கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒரு யோசனை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *