மேலும்

போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு நாளை வெளியாகும்?

Zeid Raad Al Husseinசிறிலங்கா அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்கவுள்ள போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாட்டை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கொழும்பில் நாளை நடத்தவுள்ள ஊடக மாநாட்டில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், நாளை பிற்பகல் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்.

கொழும்பு வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஏற்கனவே, ஐ.நா அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் சென்று வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்கள், முதலமைச்சர்கள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துள்ளார்.

இன்று கண்டிக்குச் சென்ற அவர், மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து உரையாடினார். மேலும் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்கா அரசாங்கம் விரைவில் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

எனினும், ஐ.நா தீர்மானத்துக்கு அமைய, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது.

இந்த நிலையில், நாளை நடத்தவுள்ள ஊடக மாநாட்டில், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை பற்றிய ஐ.நாவின் நிலைப்பாடு என்ன என்பதை செயிட் ராட் அல் ஹுசேன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் இணைந்து இந்த ஊடக மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு பங்கேற்பதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *