மேலும்

போர்க்கப்பல் இராஜதந்திரமும் சிறிலங்காவின் பாதுகாப்பின் மீதான இந்தியாவின் கடப்பாடும்

Maithripala Sirisena-INS Vikramaditya (4)சீனா தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தீர்மானத்தையும் அறிவிப்பையும் இந்தியா முதலிலேயே எதிர்பார்த்ததன் காரணமாகவே தனது போர்க்கப்பலை கொழும்பிற்கு அனுப்பியிருக்கலாம்.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் பாதுகாப்புக் கடப்பாடுகள் மீது கேள்விகளை எழுப்பி, கொழும்பில் இருந்து வெளியாகும், தி ஐலன்ட் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சிங்கள ஆய்வாளரான ரஜீய ஜயவீர. இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளார் நித்தியபாரதி.

போர்க்கப்பல் இராஜதந்திரம் என்பது விக்கிபீடியாவில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

‘அனைத்துலக அரசியலில் அல்லது அமெரிக்க வரலாற்றில் ‘போர்க்கப்பல் இராஜதந்திரம்’ என்பது, ஒரு நாடு தனது நாட்டின் கடற்படை எவ்வளவு பலத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காண்பிப்பதற்கான நேரடியாக அல்லது மறைமுகமாக பிற நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தனது போர்க்கப்பல்களை பிறநாடுகளின் கடற்பிராந்தியத்தில் தரித்து நிறுத்துகின்ற செயலாகும்’

1987 ஜூலை 29 அன்று இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, இந்தியா தனது இரண்டு போர்க் கப்பல்களை கொழும்புக் கடற்பிரதேசத்தில் நிறுத்தியிருந்தது. சிறிலங்காவில் இடம்பெற்ற கலகங்களின் போது இந்தியக் குடிமக்கள் மற்றும் சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையகப் பணியாளர்களைக் காப்பாற்றுவதற்காகவே இவ்விரு போர்க் கப்பல்களும் கொழும்புக் கரையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளதாக அப்போது இந்தியா அறிவித்திருந்தது. ஆனாலும் இந்தியாவின் இந்த நகர்வானது உண்மையில் போர்க்கப்பல் இராஜதந்திரமாகும்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்திய – சிறிலங்கா உடன்பாட்டில் கைச்சாத்திட மறுத்திருந்த நிலையில், சிறிலங்கா மீது அச்சுறுத்தலை விடுக்கும் முகமாகவே இந்தியா தனது இரண்டு போர்க்கப்பல்களையும் கொழும்புக் கடற் பிரதேசத்தில் தரித்து நிறுத்தியிருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  இந்தியக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 45,400 தொன் வானூர்தித் தாங்கிக் கப்பலான ‘ஐ.என்.எஸ்.விக்கிரமாதித்யா’ சில நாட்களுக்கு முன்னர் தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்டு சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இது சிறிலங்காவை வந்தடைந்த போது சிறிலங்காவின் அதிபர் அதனை வரவேற்று மதிப்பளித்திருந்தார்.

INS Vikramaditya

இன்றைய நிலையில் நோக்கும் போது இது ஒரு போர்க்கப்பல் இராஜதந்திரமாக இருக்காவிட்டாலும் கூட, உண்மையில் இந்தியப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்கிரமாதித்யாவின் கொழும்பு வருகை இந்தியாவின் போர்க்கப்பல் இராஜதந்திரமே ஆகும். குறிப்பாக, ஒக்ரோபர் 2014ல் சீனாவின் இரண்டு அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததன் பின்னர் அண்மையில் மூன்று சீனப் போர்க் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றுள்ள நிலையில், இந்தியாவின் போர்க் கப்பலும் சிறிலங்காவிற்கான தனது கன்னிப்பயணத்தை மேற்கொண்டதானது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறிசேன சிறிலங்காவின் அதிபராகப் பொறுப்பெடுத்த பின்னர் கூட, சீனக் கப்பல்கள் கொழும்பில் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு இந்தியா தனது அச்சுறுத்தலைக் காண்பிக்கும் முகமாகவே தனது ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யாவைக் கொழும்பிற்கு அனுப்பியதா? இதன்மூலம் இந்தியா தனது நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தனது ஏனைய அயல்நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளதா?

இந்தியப் போர்க்கப்பலின் சிறிலங்காவுக்கான பயணமானது முன்னர் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட, கடந்தவாரம் ரணில் விக்கிரமசிங்க டாவோசில் வைத்து இந்தியாவால் எதிர்க்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவித்திருந்ததுடன் தொடர்புபடுத்தினாலும் கூட ஆச்சரியப்பட முடியாது.

ஏனெனில் சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் சீனாவிற்கும் சீன நிறுவனங்களுக்கும் தனது நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பளித்தால் இது இந்தியாவின் அதிருப்தியைச் சம்பாதிக்கும். ஆகவே இந்நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்தியாவும் தனது போர்க்கப்பல் இராஜதந்திரத்தை நகர்த்தியுள்ளது. சீனா தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தீர்மானத்தையும் அறிவிப்பையும் இந்தியா முதலிலேயே எதிர்பார்த்ததன் காரணமாகவே தனது போர்க்கப்பலை கொழும்பிற்கு அனுப்பியிருக்கலாம்.

இதுமட்டுமல்லாது, பாகிஸ்தானிடமிருந்து சிறிலங்காவால் ஜே.எப்-17 போர் விமானங்கள் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் இராஜதந்திர நகர்த்தலே பாகிஸ்தானுடன் போர் விமான உடன்பாட்டை மேற்கொள்ளாது சிறிலங்கா இழுத்தடிப்பதற்குக் காரணமாகும்.

ஜனவரி 26 அன்று இந்தியா தனது 67வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய போது, சிறிலங்காவிலுள்ள இந்திய உயர் ஆணையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சிறிலங்காவின் பாதுகாப்புத் தொடர்பில் இந்தியாவின் கடப்பாடு தொடர்பாக உயர் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார். ‘இந்தியாவும் சிறிலங்காவும் தொடர்ந்தும் இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கான தொடர்பாடல் மற்றும் பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்ட பலமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன’ என இந்திய உயர் ஆணையாளர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது சிறிலங்காவிலுள்ள இந்திய உயர் ஆணையாளர் பிராந்திய இறையாண்மை தொடர்பில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டதானது இந்தியா, சிறிலங்காவிடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. எனினும், இவர் இதனைத் தனது உயர் ஆணையகத்திற்கு அப்பால் சிறிலங்காவின் வேறெந்த இடத்தில் தெரிவித்திருந்தாலும் தர்மசங்கடமான நிலை உருவாகியிருக்கும்.

1970களிலிருந்து வரலாற்றை நோக்குமிடத்து சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியா தனது கடப்பாட்டை நிறைவேற்றத் தவறியுள்ளதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இதற்கு நீண்ட விளக்கம் தேவையில்லை.

வடமராட்சி நடவடிக்கை என அறியப்படும் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என இந்தியா வற்புறுத்தியதன் காரணமாக, சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் 22 ஆண்டுகள் மேலும் தொடர்ந்தது. ஆகவே இந்த இடத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு மீதான இந்தியாவின் ஈடுபாடு எங்கே போனது?

எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு யுத்தத்தின் இறுதி சில ஆண்டுகளில் ஆயுதப் பயிற்சிகள் மற்றும் புலனாய்வு ஆதரவை இந்தியா வழங்கிய போதிலும், மூன்று பத்தாண்டுகளாக ‘போர் ஆயுதங்களை’  விற்பனை செய்ய மறுத்ததானது எந்தவகையில் சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது எனக் கருதமுடியும்.

2000ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தின் முன்னரங்குகள் போரின் பிடிக்குள் சிக்குண்டிருந்த வேளையில், இதில் அகப்பட்டுத் தவித்த சிறிலங்காப் படையினரை மீட்டெடுக்க உதவுமாறு சந்திரிக்கா அரசாங்கம் இந்தியாவைக் கோரிய போது, இதற்குப் பதிலாக நிதியுதவியை மட்டும் வழங்குவதாக இந்தியா பதிலளித்தது.

இந்தவேளையில், எல்லா நேரங்களிலும் சிறிலங்காவிற்கு உதவுகின்ற பாகிஸ்தான் உதவமுன்வந்தது. தன்னிடமிருந்த பல்குழல் பீரங்கிகளை பாகிஸ்தான் சிறிலங்காவிற்கு வழங்கி யாழ்ப்பாண முன்னரங்கில் இடம்பெற்ற யுத்தத்தில் சிறிலங்கா தரப்பைப் பாதுகாத்தது. இதற்குப் பின்னரே இந்த ஆயுதங்களுக்கான ஆவணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றன தீர்வுசெய்யப்பட்டன. இது யாழ்ப்பாண முன்னரங்கில் அகப்பட்ட ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரைக் காப்பாற்ற உதவியது.

இதேபோன்று, செக் குடியரசும் பின்னர் ஆயுத உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாண நுழைவாயிலை தமிழீழ விடுதலைப் புலிகள் மீளக்கைப்பற்றுவதன் மூலம் வானம் இடிந்துவிழாது என சில இந்தியத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், சீனாவிடமிருந்து முப்பரிமாண ரேடர் கருவியை சிறிலங்கா கொள்வனவு செய்ய விரும்பிய போதும் அதற்கு இந்தியா தடைவிதித்தது. இதன்பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் ஏற்பாட்டில் சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர் கருவி கொள்வனவு செய்யப்பட்டது.

சிறிலங்காவின் பாதுகாப்புத் தொடர்பில் இந்தியா எவ்வாறான கடப்பாட்டுடன் நடந்துகொண்டுள்ளது என்பதை இவ்வாறான சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்தியாவால் சிறிலங்காவிற்கு போதியளவு உதவிகள் வழங்கப்படாததை எண்ணி வருந்துவதாக ஒக்ரோபர் 2014ல், சிறிலங்காவிற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையாளர் தெரிவித்திருந்தார். இவர் தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிறிலங்காவை நோக்கி இந்தியாவின் உறுதிப்பாடு மற்றும் நல்லெண்ணத்தை அதிகரிக்க முயற்சித்தார். ஆனால் கெட்டவாய்ப்பாக, இந்தியாவோ அல்லது அதன் தூதுவர்களோ, கடந்த காலத்திலும் சரி தற்போதும் சரி, இந்தியா தொடர்பான சிறிலங்காவின் பெரும்பான்மை சாதாரண மக்களின் உண்மையான உணர்வுகளை வரவேற்கவும் பாராட்டவும் தவறியுள்ளனர்.

இந்தியாவால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் தொடருந்துப் பாதை மற்றும் வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் இந்தியாவால் சிறிலங்காவுக்கு ஆற்றப்பட்ட அநீதியைப் போக்க முடியாது என இலங்கையர்கள் கருதுகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையர்களின் பெரும்பாலானவர்களால் இந்தியா சந்தேகக் கண்ணுடனேயே நோக்கப்படும். இந்திய-சிறிலங்கா பாலம், முழுமையான பொருளாதார கூட்டு உடன்படிக்கை போன்றன தொடர்பில் இன்றும் பெரும்பாலான இலங்கையர்கள் மத்தியில் அதிருப்தியும் எதிர்ப்பும் காணப்படுகின்றன.

சில இந்திய எழுத்தாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது போன்று, இந்தியா தொடர்பான ஐயப்பாடு பெரும்பாலான சாதாரண இலங்கையர்களால் மட்டுமன்றி, தென்னாசியா முழுவதிலும் பரவலாக எழுப்பபடும் வினாவாகக் காணப்படுகிறது.

ஒரு கருத்து “போர்க்கப்பல் இராஜதந்திரமும் சிறிலங்காவின் பாதுகாப்பின் மீதான இந்தியாவின் கடப்பாடும்”

  1. Prabhu Britto Albert
    Prabhu Britto Albert says:

    முனைவர் ஜெ. ஜெயலலிதாவினால் ஈழம் விடியல் காணும் என்று பதிந்தவுடனே காரியங்கள் விரைவாக தாமாகவே தானியங்கி முறையில் நிகழ்கின்றதோ?
    http://www.puthinappalakai.net/2016/02/08/news/13443
    இதே போல் விரைவு நீடித்தால், ஈழம் விரைவில் விடியல் காணும், முனைவர் ஜெ. ஜெயலலிதாவின் நாமத்தின் மகிமை கொண்டே…
    விரைவு குறைந்தாலும் கவலை இல்லை.. முனைவர் ஜெ. ஜெயலலிதாவினால் ஈழம் விடியல் காணும்..
    விவரங்களுக்கு
    https://www.facebook.com/Thisayanvilay/
    மற்றும்
    https://www.facebook.com/prabhu.britto

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *