மேலும்

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைத்த பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம்

ban-ki-moonஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில், அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள், பெண்கள் உரிமைக்கான ஆதரவு, உலக அமைதி மற்றும் பாதகாப்புக்காக அளித்த பங்கு என்பனவற்றுக்காகவே ஐ.நா பொதுச்செயலருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது காலத்தில், போரின் போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அது தொடர்பான கண்காணிப்பை மேற்கொள்வதற்கு சிறப்பு அறிக்கையாளரும் நியமிக்கப்பட்டார்.

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளும் இவரது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.

காசா, கினியா, பாகிஸ்தான், சிறிலங்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து அவை பற்றிய உயர்மட்ட கவனிப்புக்கு கொண்டு சென்றதன் மூலம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களைக் கொடுத்திருந்தார் என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ban ki moon

கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலருக்கு இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.

கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கடந்த 500 ஆண்டுகளாக இந்த கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி வருகிறது. 1493ஆம் ஆண்டில், கவிஞர் ஜோன் ஸ்கெல்டனுக்கு முதல்முதலாக இந்த கௌரவ பட்டம் அளிக்கப்பட்டதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிவுகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவொன்றை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் 2010ஆம் ஆண்டு நியமித்திருந்தார்.

அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வைக்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுடன் ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து பான் கீ மூன் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *