ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறு சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அழுத்தம்
ஜே.எவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுப்பார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பாதுகாப்பு ஊடகமான ஐஎச்எஸ் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜே.எவ்-17 பலநோக்கு போர் விமானங்களை மியான்மாருக்கு விற்பனை செய்வது தொடர்பான உடன்பாட்டை செய்துள்ளதையடுத்து, சிறிலங்காவுடன் அத்தகைய உடன்பாட்டை செய்து கொள்வதற்கு பாகிஸ்தான் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கும் முக்கியமான படிநிலையாக இருக்கும்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் ஜனவரி முதல் வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன் போது, சீனாவின் செங்டு விமானத் தொழிற்துறை கூட்டுத்தாபனத்துடன் இணைந்து பாகிஸ்தானின் ஏரோநொட்டிக்கல் கொம்பிளஸ் தயாரித்துள்ள ஜேஎவ் -17 என்ற மூன்றாவது தலைமுறைப் போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வது தொடர்பான, இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு அவரது நிகழ்ச்சி நிரலில், உயர் முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில் பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்களவுக்கு ஜே.எவ் -1 7 போர் விமானத்தை பாகிஸ்தானியர்கள் காண்பித்ததையடுத்தே , கொழும்பில் நவாஸ் ஷெரீப்பின் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.
எயர் மார்ஷல் ககன் புலத் சிங்களசிறிலங்கா திரும்பியவுடன், ஜேஎவ்- 17 போர் விமானங்கள் உற்பத்தி செய்யப்படும், இஸ்லாமாபாத் அருகிலுள்ள கம்ரா தளத்துக்கு, தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் விமானிகளைக் கொண்ட மதிப்பீட்டுக் குழுவொன்றை அனுப்பி வைத்திருந்தார்.
ஏற்கனவே பயன்படுத்தி வரும், பல்வேறு வகையான சீன விமானங்களின் போரிடும் திறனை தரமுயர்த்த தற்போது சிறிலங்கா விமானப்படை எதிர்பார்த்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், தரைத் தாக்குதல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றிய இஸ்ரேலியத் தயாரிப்பான கிபிர் போர் விமானங்களிலேயே தற்போது, சிறிலங்கா விமானப்படை தங்கியிருக்கிறது.
தற்போது ஜேஎவ்-17 போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையின் முதலாவது ஸ்குவாட்ரனில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டில் இருந்து இவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தான் விமானப்படை தன்னிடமுள்ள பழைமையான மிராஜ் மற்றும் சீனாவின் எவ்-7 பி போர் விமானங்களுக்குப் பதிலாக, ஜே.எவ்-17 போர் விமானங்கள் 250 ஐ சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
எனினும், ஜே.எவ்-17 போர் விமானங்களை சீன விமானப்படை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.