மேலும்

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் -2016

pongal 2016 - 1தமிழர் திருநாளை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2016” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் க.முகுந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது –

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் தகவமைப்பை ‘தமிழால்’ நினைவில் நிறுத்தும் வகையில் பிரான்சில் தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒருநாள்! – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்!! – ‘தமிழர் திருநாள்’எனவாகும் கருத்தியலில் தொடர்ந்த நிகழ்வரங்கை பிரான்சில் நிகழ்த்தி வருகிறோம்.

எதிர்வரும் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2016” நிகழ்வு – பிரான்சில் நடக்கும் பத்தாவது ஆண்டு நிகழ்வாகும். இந்த நிகழ்வு இரு நாட்கள் நடைபெறும் முதல் நாளான 16 சனவரி 2016 இல் பாரீசில் ஆய்வரங்கம் நிகழும். இதற்கு அடுத்தநாள் 17 சனவரி 2016 அன்று பொங்கலிடலுடனான சிறப்பு ‘தமிழர் திருநாள்’ பொது நிகழ்வரங்கம் நடைபெறும்.

‘புலம்பெயர் தமிழர் திருநாள் – 2016’ பிரான்சில் பத்தாவது நிகழ்வரங்காகிறது. இது முதற் தடவையாக பாரீசு நகரின் மையத்தில் அமைந்த பாரீசு – 2 நகரசபையில் நடைபெறுவதானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக தடமிடுகிறது. தமிழர்களது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தமிழர் பண்பாட்டு நிகழ்வு இங்கு நடப்பதானது பாரீசு நகரின் பன்மைத்துவ அடையாள அங்கீகாரமாகவே கொள்ளல் பொருத்தமாகும்.

புலம்பெயர் தமிழர் திருநாள் 2016- பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2047)  பத்தாவது நிகழ்வரங்கம் [Fête de la Diaspora Tamoule 2016 France].

கடந்த பத்தாண்டு பொது நிகழ்வரங்கத் தொடரோட்டத்தை மீட்டுப் பார்க்கையில், தைப்பொங்கல் – தமிழர் திருநாளாக – புலம்பெயர் திருநாளாக எமக்கான பொது அடையாள பண்பாட்டு நிகழ்வாக ஐரோப்பாவில் அறிமுகமாகியிருக்கிறது. பானை வைத்துப் பொங்கும் நிகழ்வரங்கை எமக்கான பொதுப் பண்பாட்டுக் குறீடாக, சாதி, மத, பிரதேச, தேசம் கடந்த காட்சி நிகழ்வரங்கமாக ஐரோப்பாவில் அறிமுகமாகியிருக்கிறது.

எமக்கான தொன்மையும் நீட்சியுமான தனித்துவ ஆடல் அழகியல் கலைகளும் – வீரக் கலைகளும் – இன்னிய அணியும் அறிமுகமாகி பரவலாக வழிகண்டன. எமது பெரும் முதுச வாத்தியக் கருவியான ‘பறை இசையரங்கம்’ பாரீசில் அரங்கம் கண்டு தொடர்கிறது. வேற்றுமையில் ஒருத்துவம் காணும் ஐக்கிய பண்பாட்டு நிகழ்வரங்கமாக பொங்கல் நிகழ்வரங்கம் உதாரணமாகியது. தமிழால் ஒருத்துவமாகும் இத்தகைய நிகழ்வில் நமது சந்ததிச் சிறார்களது சிறுகைகளைப் பற்றி தகைசார் சான்றோர்கள் எழுதத் தொடங்கி வைக்கும் ‘அகரம் எழுதல்’ எனும் புதிய நிகழ்வரங்கம் நடைமுறையாகியுள்ளது.

ஆண்டு தோறும் பங்கேற்கும் தகைசார் வல்லுனர்கள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வரங்கம் தனித்துவமான நிகழ்வரங்கமாகியுள்ளது. இங்கு தொடரப்படும் ஆவண – கலைப் பண்பாட்டு – உணவுக் கண்காட்சியரங்கம் எமைப் பற்றிய புரிதல்களை இயல்பாகப் பரவலாக்குகிறது. சமூகப் பிரக்ஞையுடைய தன்னலமற்ற தன்னார்வத் தொண்டர்களாலும் மதிப்பான ஆர்வலர்களாலும் இந்நிகழ்வு உலகமெங்கும் வியாபிக்க ஊக்கமளிக்கிறது.

இம்முறை நிகழ்வில் தன்னார்வத்துடன் தமிழர் சங்கங்களான CDAN, ASCES, REDA, LIFT, VSV கலைக்கூடம், அவதாரம், தமிழ் அகம், நிருத்தியாலயம், சுருதி லயா என்பவற்றுடன்  சிலம்புச் சங்கம் கைகோர்த்து பத்து சங்கங்களாக  மற்றும் குடும்பங்கள், வியாபார நிறுவனங்கள் இணைந்ததாக முன்னெடுக்கிறது.

இம்முறை நிகழ்வில் முன்னைநாள் யாழ் பல்கலைக்கழத் தமிழ்த்துறை பேராசிரியையும் மொழியில் துறை வல்லுனருமாகிய கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார். இவருடன் உலகத்தமிழ் அறிவிப்பாளராக தமிழ்த் தொண்டாற்றும் எமது அன்புநிறைந்த நெறியாளர் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்.

இந்த நிகழ்வில் சென்ற ஆண்டு தமிழ் முறைப்படி இல்வாழ்வு ஒப்பந்தத்தில் இணைந்த ‘சிந்துயன் – கார்த்திகா’ இணையர்கள் பொங்கலிடுபவர்களாக ப் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

பிரான்சில் புலம்பெயர் தமிழ் இளம் தலைமுறையினர் பங்குபெற்றும் பறை இசை அரங்கேறுகிறது. தவிரவும் புகழ்பெற்ற ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலுடன் அவதாரம் குழுவினரின் சிறப்பு நடன அரங்கமும் புகழ்பெற்ற மன்மதன் பாஸ்கி &சிறி மாமா குழுவினரின் அரங்காற்றுகையும் நிகழ்த்தப்படவுள்ளது.

பாரீசு நகரில் இசையரங்க அரங்காற்றுகையில் தனித்துவத் தடமிடும் சுருதிலயா குழு வழங்கும் சிறப்பு தமிழ் இசை அரங்கும் நிகழ்வாகிறது. இவர்களுடன் புலம்பெயர் தமிழ்ச் சிறார்கள் வழங்கும் நிகழ்கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இத்தகைய நிகழ்வுகளுக்கூடாக புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்டுள்ள எமது எதிர்காலச் சந்ததியினருக்கும் புலம்பெயர்வு நாடுகளில் எம்மோடு வாழும் பல் தேசிய சமூகத்திற்கும் தொன்மையும் நீட்சியுமான எமக்கான பண்பாட்டுத் தடங்கள் தொடர்பான தெளிவுகள் கிட்டுமென பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

இந்நிகழ்வில் தாங்கள் பங்கேற்றுச் உலகெங்கிலும் பரவலாக்கம் பெற ஆவன செய்வீர்களென அன்புடன் எதிர்பார்க்கிறோம். தங்களுடன் தகுநல் தொடர்பாடல்களைக் கிரமமாகப் பேண தங்களுடைய மடலுக்காக் காத்திருக்கிறோம்.

இந்த நிகழ்வரங்கம் சாதி -மத -பிரதேச -தேச -வர்க்க பேதங்களற்ற வகையில் தமிழால் ஒன்றிணையும் சாத்தியத்தை பத்தாவது தடவையாக நிகழ்த்தவுள்ளது. சிறப்பான செயற்திட்டங்களுடன் முன்னெடுக்கப்படும் எமது இத்தகைய முயற்சி ஊடகங்கள் வாயிலாகவே வெகுமக்கள் தளத்தில் பரவலாகி அதனோடு இயைந்த பயணத்தில் விரிவாக முடியும். இத்தகைய வழிகளாலேயே தமிழுக்கான – தமிழர் திருவிழாவாக – புலம்பெயர் தமிழர் திருநாள்  உலகெங்கிலும் விரவியவர்களாக வாழத் தலைப்பட்டுள்ள எமது சந்ததியினர் ஒன்றுகூடல் நிகழ்வாகி ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ எனவாக நிமிரட்டும்!.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்!’ என்பது எம்மவர் வாழ்வில் முன்னோர்களால் விட்டுச் சென்ற முதுமொழி. இக்கூற்று வழியில் எம்மவர் வாழ்வுத் தளத்தில் புதிய நம்பிக்கை வாழ்வாதாரம் கிட்டடும்!

நீண்டு செல்லும் தமிழர் வாழ்வில் இயற்கையின் சீற்றத்தாலும் மானிடக் கொடூரங்களாலும் கண்ட அழிவுகள் பலவாயினும் அவற்றையும் கடந்து எதிர்கொண்டு வாழும் நம்பிக்கையூட்டும் நன்னாள் பொங்கல் நாள் !

பழையன கழிந்து புதியன புகட்டும்!

எல்லோருக்கும் இன்பம் பொங்கட்டும்!!

தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள் – இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் !

” யாதும் ஊரே யாவரும் கேளிர் ”

இனிய பொங்கல் – புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து அனைவரும் வருக என அழைக்கிறோம்!

– க. முகுந்தன் (செயலாளர் – நிகழ்வு ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர்)

28.12.2015 பாரீசு

நிகழ்வு விபரம்:

ஆய்வரங்கம்
16.01.2016 சனி 13.00 மணி முதல் 17.00மணி
பாரீசு 2 – நகர சபை மண்டபம்
Mairie du 2eme arrondissement Paris
8 Rue de la Banque,
75002 Paris
(Metro : Metro-3 Bourse ou Sentier)

நிகழ்வரங்கம்
17.01.2016 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 14.30 மணி
பொங்கலிடல் – கோலமிடல் – காட்சியரங்கம் – அகரம் எழுதல்
பாரீசு 2 – நகர சபை மண்டபம்
Mairie du 2eme arrondissement Paris
8 Rue de la Banque,
75002 Paris
(Metro: Metro-3 Bourse ou Sentier)

அரங்காற்றுகை

17.01.2016 ஞாயிறு காலை 14.30 மணி முதல் மாலை 17.30 மணி
Salle Espace Jean Dame

17 Rue Léopold Bellan
75002 Paris
(Metro : Metro-3 Bourse ou Sentier)

pongal 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *