இரு நீதிவான்களின் இடமாற்றங்கள் ரத்து – நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய சிறிலங்காவின் நீதிச் சேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
2016 ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம், 117 நீதிவான்களை இடமாற்றம் செய்யும் உத்தரவை நீதிச் சேவைகள் ஆணைக்குழு பிறப்பித்திருந்தது.
முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற பல்வேறு ஒழுங்கீனங்கள் குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இது முக்கியமான வழக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்த நிலையிலேயே இவர்களின் இடமாற்றங்களை நிறுத்தி வைக்கவும், இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்கு இவர்கள் ஏற்கனவே பணியாற்றிய நீதிமன்றங்களில் பணியாற்ற அனுமதிக்கவும் தீர்மானித்துள்ளது.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும், முன்னைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் இந்த நீதிபதிகள் முன்பாகவே விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.