மேலும்

பூனைக்கு மணி கட்டுவது யார்?

Sam-CVதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாக்கிய முரண்பாடுகள் இப்போது, உட்கட்சி விவகாரம் என்பதையும் தாண்டி, சர்வதேச விவகாரமாக மாற்றம் பெற்றிருக்கிறது.

அண்மையில் வடக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்த இந்தியத் தூதுவர் வை.கே..சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் யாழ்ப்பாணத்தில் நீண்டதொரு பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட, வடக்கு மாகாண முதலமைச்சர், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கக்கூடாது என்றும் அரசியல் தீர்வுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணம் இது என்று இந்தியத் தூதுவர் குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார்.

அதுபோலவே, அமெரிக்காவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்  ஏற்பட்டுள்ள குழப்பங்களை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அண்மையில், இலங்கைக்கு வந்திருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் கூட இந்த விவகாரத்தை வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள், பிறநாடுகள் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் அளவுக்குச் சென்றிருப்பது, துரதிஷ்டமான ஒன்று தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்று அமெரிக்கா, இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விவகாரத்தை, பலரும் இரண்டு விதமாகப் பார்க்கின்றனர்.

ஒரு தரப்பு, தமது நாடுகளின் விருப்பத்துக்கேற்ப செயற்படும் கூட்டமைப்பை உடையாமல் பாதுகாக்க இந்த நாடுகள் முனைவதாகவும், கூட்டமைப்பில் உடைவு ஏற்பட்டால், உடைந்து செல்லும் அணி தமது கைக்குள் இருக்காது என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன என்றும் கூறுகிறது.

இன்னொரு தரப்பு, கூட்டமைப்புக்குள் ஏற்படும் உடைவுகள், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தாம் கொடுக்கும் அழுத்தங்களை அர்த்தமற்றதாக்கி விடும், அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விடும் என்று இந்த நாடுகள் அஞ்சுவதாக கருதுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்று அமெரிக்காவும், இந்தியாவும், விரும்புகின்றன என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்த நாடுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சுமுகமான உறவுகள் இருப்பது உண்மை.

இலங்கை விவகாரத்தில், அதிகம் ஈடுபாடுள்ள நாடுகளாக – செல்வாக்குச் செலுத்தும் நாடுகளாக இவையே இருக்கின்றன.

எந்த நெருக்கடி ஏற்பட்டாலும், இந்த நாடுகளிடம் முறையிட்டு, தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை கூட்டமைப்புக்கும் இருக்கிறது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி எல்லாத் தரப்புகளுக்குமே, அமெரிக்காவும், இந்தியாவும் தான் தேவைப்பட்டன.

ஜெனிவாவில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் தீர்மானங்களைக் கொண்டு வருவது கூட, அமெரிக்காவினால் மட்டும் தான் சாதிக்க முடிந்தது.

இதனை வேறொரு நாடு கையில் எடுத்திருந்தால், மகிந்த ராஜபக்ச அதனை நிச்சயம் தோற்கடித்திருந்திருப்பார்.

ஆக, அமெரிக்காவையும், இந்தியாவையும் வைத்தே, சர்வதேச அரங்கில் தமிழர்கள் காரியம் சாதிக்கலாம் என்ற வலுவான நம்பிக்கை கூட்டமைப்புக்கு இருப்பதும், இந்த நாடுகளுடன் கூட்டமைப்பு நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதும் ஆச்சரியத்துக்குரிய விடயமன்று.

இப்போதைய நிலையிலும், இலங்கை அரசாங்கம் கைவிட்டால், சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று தான் கூட்டமைப்பு கூறி வருகிறது.

அமெரிக்காவும், இந்தியாவும் இல்லாத ஒரு சர்வதேச சமூகம், இலங்கையில் ஒருபோதும், செல்வாக்குச் செலுத்துவதாக இருக்க முடியாது.

அந்த வகையில், இந்த நாடுகளின் தயவை கூட்டமைப்பு எப்போதும், இழந்து விடாமல் இருக்கவே முயற்சிக்கும்.

அதேவேளை, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், இலங்கையில் தமது நோக்கங்களை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவசியம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவாக இருந்தால் தான், அதனை வைத்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று இந்த நாடுகள் நினைக்கலாம்.

எனவே அமெரிக்காவும், இந்தியாவும், கூட்டமைப்புக்குள், முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கலாம்.

கூட்டமைப்புக்குள் உள்ள முரண்பாடுகளைக் காரணம் காட்டி, பெரும்பான்மைச் சமூகத்தினர், அரசியல் தீர்வு தொடர்பான உறுதிப்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளக் கூடும் என்ற கருத்தை இந்தியத் தூதுவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதனை அவர், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வெளிப்படுத்தினாரா இல்லையா என்று தெரியவில்லை.

எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அதனைக் கூறியிருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரே இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைப் பயன்படுத்தித் தான், பலரும் கூட்டமைப்பை உடைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமைத்துவத்தை ஏற்படுத்த சில தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள், நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் தோல்வி கண்டிருந்தன.

இந்தநிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் கற்பனையில் பலரும் மிதக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

வெளிப்படையாக இரண்டு கட்சிகள், அவரை தமது கட்சிகளுக்குத் தலைமை தாங்க அழைப்பு விடுத்துள்ளன.

இது அந்தக் கட்சிகளின் தலைமைத்துவ வங்குரோத்து நிலையை மட்டும் வெளிக்காட்டவில்லை, கூட்டமைப்பைச் சிதைப்பதற்கான, உறுதிப்பாட்டையும் தான் வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதன் மூலம் மட்டும், இத்தகைய சக்திகள் எதனைச் சாதிக்கப் போகின்றன என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

அந்த மாற்றுத் தலைமை தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று விட்டாலும். கூட, தற்போது கூட்டமைப்பு கடைப்பிடிக்கும் கொள்கையை விடுத்து புதிதாக எதையும் செய்யப் போவதில்லை.

எதிர்ப்பு அரசியல் அணுகுமுறையை கடைப்பிடிப்பதை விட வேறெதையும் செய்ய முடியாது.

அரசாங்கத் தரப்பில் இருந்து கொள்கை ரீதியான மாறுதல்கள் இல்லாமல், சர்வதேச சமூகத்தின் குறிப்பாக இந்தியா, அமெரிக்காவினது ஆதரவும் இல்லாமல், மாற்றுத் தலைமை ஒன்றினாலும் எதையும் சாதிக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் காலம் வேறு. தற்போதைய சூழல் வேறு. அது தமிழருக்கு ஆயுத பலத்தைக் கொண்டு சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்த காலம்.

வெறும் அரசியல் பலத்தையும், அறிவு பலத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு, அரசியல் தீர்வைப் பெற வேண்டிய நிலை தான், இந்தக் காலம்.

அறிக்கை, பேச்சு அரசியலுக்கு அப்பால் செல்லத்தக்க – தமிழரின் உரிமைப் போராட்டத்தை, வன்முறையுமில்லாத அதேவேளை, மென்வலு அரசியலுமில்லாத ஒரு போராட்டத்துக்குள் கொண்டு செல்லத்தக்க அரசியல் தலைமைகளும் கூட, தமிழர் தரப்பில் இல்லை என்பதை ஏற்கத் தான் வேண்டும்.

அரசியல் தீர்வுக்காக தமது உயிரைக் கொடுத்து, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் திராணியுள்ள எந்த தலைவரும், தமிழர் தரப்பில் இல்லை என்பதே உண்மை.

இது மாற்றுத் தலைமையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் பொருந்தக் கூடிய விடயமே.

அவ்வாறான அரசாங்கத்துக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அழுத்தம் கொடுக்கக் கூடியதொரு போராட்டத்தை முன்னெடுக்கத் தக்க தலைமைத்துவம் இல்லாத நிலையில்- வெறும் நாடாளுமன்ற ஆசன பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு வரையறுக்கப்பட்ட பேரங்களை மட்டும் தான் பேச முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமன்றி, எல்லா அரசியல் சக்திகளுக்கும் இது பொருந்தும்.

இந்தக் கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடையவிடாமல் பாதுகாக்க அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முனையும் அளவுக்கு, உள்ளுக்குள் இருக்கின்ற தரப்புகளும், தமிழ் மக்களும், சிவில் சமூகமும் எந்த முயற்சிகளையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.

கூட்டமைப்பின் தலைமை, வடக்கு மாகாண முதலமைச்சருடன், உள்ள முரண்பாடுகளைக் களைவதற்கு வெளிப்படையான எந்த முயற்சிகளையும் முன்னெடுத்ததாக தெரியவில்லை.

இரா.சம்பந்தன் நினைத்திருந்தால், இந்த விடயத்தை இந்தளவுக்கு  தீவிரமடையாமல் தடுத்திருக்கலாம். அவர் காட்டிய அதிகபட்ச பொறுமை வெளிநாடுகள் கூட, இந்த விவகாரத்தில் தலையிடுகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர் தரப்புக்குள் ஒற்றுமை அவசியம் என்று வெளிநாடுகள் வந்து அறிவுரை கூற வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது மிகப் பெரிய அவமானமானத்துக்குரிய விடயம்.

விடுதலைப் புலிகள் மற்ற அமைப்புகளையும், கட்சிகளையும் அனுசரித்து நடப்பதில்லை, அரவணைத்துச் செல்வதில்லை, ஒற்றுமையாக இருக்கவில்லை என்று ஒரு காலத்தில், புராணம் பாடியவர்கள், இன்று, அதேவழியைப் பின்பற்றுகிறார்கள்.

தமிழர் தரப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை அரசாங்கமும், புறச்சக்திகளும், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையில், கூட்டமைப்புத் தலைமை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தமக்கு வாக்களித்த மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அதனை நிறைவேற்ற வேண்டியது கூட்டமைப்பில் உள்ள அனைவரதும் கடப்பாடு.

கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களின் முழுமையான எதிர்பார்ப்பு- ஒற்றுமை தான்.

ஒன்றுபட்டு நின்று தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவே கூட்டமைப்பை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தனர். தேர்தலில் மக்கள் கொடுத்த ஆணை அது தான்.

அதனை மீறாத வகையில், செயற்பட வேண்டியது கூட்டமைப்பின் ஒவ்வொரு தலைவரதும், கட்சிகளதும், கடப்பாடாகும்.

இந்தக் கட்டத்தில் தற்போதைய குழப்பங்களுக்கு முடிவுகட்ட கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள செல்வாக்கு மிக்க- மதிப்பு மிக்க ஒரு தரப்புத் தான் தலையீடு செய்ய வேண்டிய நிலை ஒன்றே தோன்றியிருப்பதாகத் தெரிகிறது.

அவ்வாறு பூனைக்கு மணி கட்டப் போவது யார்?  பார்க்கலாம்.

– என்.கண்ணன்

வழிமூலம் – வீரகேசரி் வார வெளியீடு

2 கருத்துகள் “பூனைக்கு மணி கட்டுவது யார்?”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    இந்த விடயத்துக்கு சம்பந்தரே முளுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.1 சம்பந்தருடைய ஏதாச்சதிகார நடை முறை.2 எவருடைய ஆலோசனையும் இன்றி தமிழரசு கட்சியோடு எது வித சம்பந்தமும் இல்லாத சுமந்திரனை பின் கதவால் அழைத்து வந்தமை.3 தந்தை செல்வா காலத்து தீவிர ஆதரவாளர்களான சிற்றம்பலம் ஐயா போன்றவர்களை ஒதுக்கியமை.4 விக்கினேசுவரன் ஐயயாவை சுமந்திரன் விமர்சித்த போது பொத்திக்கொண்டு இருந்மை.5 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப் படவில்லை என்று பல இடங்களில் பேசி சுமந்திரன் அவமான பட்டபோதும் பொத்திக் கொண்டு இருந்தமை.6 சுமந்திரன் குடும்பத்தோடு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டமை இன்னும் ஏராளம் இன்று தமிழர்களுக்கு நன்மை செய்வதாயின் சம்பந்தர் சுமந்திரன் இருவரும் அரசியலில் இருந்து விலகிகொள்வதே இவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசாங்கம் (மைத்திரி.ரணில்)தான் நினைத்ததைதான் செய்யபோகிறது

  2. மனோ says:

    கார்த்தி கேசு இந்திரனின் கருத்து மிகச் சரியானதும் உண்மையும் ஆகும். எனவே அக்கருத்தை முழு மனதோடு வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *