மேலும்

சிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள உயரதிகாரி தீவிர பேச்சு

amy-searight-sl-commanders (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர் அமி சீரைட், கொழும்பி்ல் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பணியகத்தின் கீழ், தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராகப் பணியாற்றும் கலாநிதி அமி சீரைட், நேற்று முன்தினம் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தார்.

நேற்று முன்தினம் அவர், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் மற்றும் அதிகாரிகளையும், சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசிய அவர், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கூட்டுப்படைகளின் தலைமையகத்தில்,  கூட்டுப்படைகளின் தளபதி  எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலகவையும், சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவையும், சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத் சிங்களவையும் கலாநிதி அமி சீரைட் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

amy-searight-sl-commanders (2)amy-searight-sl-commanders (3)amy-searight-sl-commanders (4)

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவாக்குதல் மற்றும், சிறிலங்கா படைகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தே, அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா படைகளை மறுசீரமைப்பதற்கு அமெரிக்கா வலியுறுத்தி வருவதுடன், அதற்கான உதவிகளை வழங்கவும் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வந்துள்ள, கலாநிதி அமி சீரைட், சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இதுபற்றி தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *