தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்களாம்- உறுதி கூறுகிறார் ராஜித
சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்றும், தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன.
“போரின் பின்னர் வடக்கில் பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா இராணுவம் வைத்திருந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்களை தமது சொந்த நிலங்களைப் போல் பாவித்தனர்.
அதேபோல் தேவையற்ற இராணுவ முகாம்களை அமைத்தும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கியும் தமது ஆதிக்கத்தை தக்கவைத்திருந்தனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கிலும் ,கிழக்கிலும் தேவையற்ற இராணுவ முகாம்கள் அனைத்தையும் நீக்கி பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
வடக்கிலும், கிழக்கிலும் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் இல்லை.
இந்த நாட்டில் சகல பகுதிகளிலும் மூவின மக்களும் வாழ உரிமை உள்ளது. வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போர்க்காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நிலங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
இப்போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுதான் வருகிறது.
தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் தமிழ் மக்களின் உரிய நிலங்களில் அத்துமீறிய சிங்கள் குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது. இந்த விடயத்தில் யாரும் எம்முடன் முரண்பட்டு அனைத்துலக தரப்பை நாடவேண்டிய தேவை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.