மேலும்

சீனாவையும், அதனை நிதியையும் மீண்டும் ஒருமுறை வரவேற்கிறது சிறிலங்கா

MS-chinese delegates (1)யுத்தத்தின் இறுதி வாரங்களில் சிறிலங்காவின் போர் வலயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுத்த வேளையில், இந்த இடைவெளியை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டது.

இவ்வாறு லண்டனில் இருந்து வெளியாகும் independent நாளிதழில் Peter Popham எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்த போது தன்னைத் தானே உயர்வாக எண்ணிக் கொண்டார். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையாக காணப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் சொந்த இடம் தென்னிலங்கையின் கரையோரக் கிராமமான அம்பாந்தோட்டை ஆகும். இக்கிராமமானது இந்திய மாக்கடலின் அருகில் அமைந்துள்ள ஒரு மீனவக் கிராமமாகும்.

இந்தக் கிராமமானது சிறிலங்காவின் மத்திய ஆட்சியாளர்களின் நேரடிக் கவனிப்பிற்கு உள்ளாவதென்பது அவ்வளவு இலகுவான காரியமாகக் காணப்படவில்லை.

ஆனால், மகிந்தவுக்கு முதல் சிறிலங்காவில் செயற்பட்ட பல அரசியல்வாதிகள் போன்றே, மகிந்த ராஜபக்சவும் தனது சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்வதில் முன்னின்றார்.

அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ச அனைத்துலக துடுப்பாட்ட அரங்கம், மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம், மாகம்புர  மகிந்த ராஜபக்ச துறைமுகம் போன்ற பல்வேறு கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் இவற்றில் எந்தவொரு கட்டுமானமும் பாரிய வெற்றியைப் பெறவில்லை. பணத்தைக் கொண்டு ஒரு துறைமுகத்தையும் விமான நிலையம் ஒன்றையும் வாங்க முடியுமே தவிர நீண்ட கால அடிப்படையில் நோக்கும் போது இந்தப் பணமானது விமானங்களையும் பயணிகளையும் பெற்றுத் தர ஒருபோதும் உதவாது.

இலங்கையர்கள் துடுப்பாட்டத்தை நேசிக்கின்ற அதேவேளையில் கொழும்பு, காலி மற்றும் தம்புள்ள போன்ற இடங்களில் சிறப்பு வாய்ந்த அனைத்துலக விளையாட்டு அரங்குகள் காணப்படுவதால் இவற்றைத் தவிர்த்து விட்டு பின்தங்கிய கிராமமான அம்பாந்தோட்டை நோக்கிச் செல்வதில் மக்கள் ஆர்வங் காண்பிக்கவில்லை.

தன்னுடைய ஒளிப்படத்தை நாட்டின் நாணயத்தாள்களில் இட்ட இந்தப் பெரிய மனிதன் எவ்வாறு இவ்வாறான முட்டாள்தனமான திட்டங்கள் மீது நிதியை முதலிடுவதன் மூலம் வெற்றிபெற முடியும் எனக் கருதியிருப்பார்?

ராஜபக்ச சீனாவின் எடுபிடியாகச் செயற்பட்டார். சிறிலங்காவில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் எனப் பிரபலமாகப் பேசப்பட்ட சீனாவின் கையாளான ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் அரசியல் யாப்பை மீறிச் செயற்பட்டார்.

அத்துடன் தனக்குச் சார்பற்ற நீதிபதிகள், கட்டளைத் தளபதிகள் போன்றவர்களை சிறைகளில் அடைத்தார். உள்நாட்டில் தனக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களை ராஜபக்ச அச்சுறுத்தினார்.

இதனால் இவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

மகிந்தவின் இரக்கமற்ற சகோதரரான கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய போது புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

யுத்தத்தின் இறுதி வாரங்களில் சிறிலங்காவின் போர் வலயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுத்த அதேவேளையில், இந்த இடைவெளியை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டது.

ராஜபக்சவின் சமாதான பங்குலாபமானது சீனாவில் தயாரிக்கப்பட்டது. அதாவது சீனா மகிந்தவின் ஆட்சியைப் பயன்படுத்தியவாறு சிறிலங்காவில் தொடருந்துப்பாதைகள், புதிய வாகனப் போக்குவரத்துப் பாதைகள், கொழும்பில் திட்டமிடப்பட்ட துறைமுக நகரம் போன்ற பல்வேறு திட்டங்களில் தனது நிதியை முதலிட்டது.

ஆனால் திடீரென ராஜபக்ச பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இவர் சீனாவில் தங்கியிருந்தார். இதனை இலங்கையர்கள் விரும்பவில்லை. இதுவே இவர் தேர்தலில் தோல்வியுறுவதற்கான காரணமாகும்.

சிறிலங்காவுக்கு தான் வழங்கிய கடனின் வட்டிவீதத்தை சீனா திடீரென அதிகரித்தது. சிறிலங்காவை புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சீனாவின் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஏனெனில் இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிலமானது 99 ஆண்டு குத்தகையுடன் வழங்கப்பட்டதால் பின்னர் இதில் மாற்றம் செய்யப்பட்டது.

சிறிலங்காவானது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆகிய மூன்று நாட்டவர்களாலும் 400 ஆண்டுகளாக கொலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும் சீனாவின் கொழும்பு நகரத் திட்டத்திற்காக நிலம் வழங்குவதற்கு உடன்படவில்லை.

‘இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காக வெள்ளையரால் (சிக்) கையகப்படுத்தப்பட்ட நிலமானது தற்போது வெளிநாட்டவர்களால் இலங்கையர்கள் சிலருக்கு கப்பம் செலுத்தப்பட்டு உடமையாக்கப்படுகிறது’ என ராஜபக்சவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விளக்கவுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு ‘கப்பம்’ என்பது சீனாவால் தனக்குச் சாதகமான திட்டங்களை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட இலஞ்சத்தையே குறிக்கிறது.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியுற்றார்.

குறிப்பாக சீன அதிபர் சி ஜின்பிங் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் ராஜபக்ச பதவி துறக்க வேண்டிய நிலையேற்பட்டது. இதற்கு சீனாவின் செல்வாக்கு சிறிலங்காவில் அதிகரித்தமையே காரணமாகும்.

தற்போது சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் சீனாவால் சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது பெப்ரவரி மாதத்தில் மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் சிறிசேன வெற்றி பெறுவதற்கு முயற்சித்த போது சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்கின்ற பரப்புரை பயன்படுத்தப்பட்டது. தற்போது இவர் ஆட்சியில் உள்ளார். ஆகவே செல்வந்த நாடுகளுடன் தொடர்பைப் பேணுவதில் சிறிசேன அக்கறை காண்பிக்கிறார்.

இது தவிர, சீனா தனக்கு என்ன தேவைப்படுகிறதோ அதனைப் பெற்றுக் கொள்கிறது என்பதை முழு ஆசியாவும் உணர்ந்துள்ளது. இதனையே சிறிலங்காவும் உணர்ந்துள்ளதால் மீண்டும் இது சீனாவையும் அதன் நிதியையும் வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *