மேலும்

அமெரிக்க சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் – அனைத்துலக ஊடகம்

MS-Obama-un (1)சில ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மாரின் ‘திறந்த ஜனநாயகம்’ தொடர்பில் ஏற்பட்ட கசப்பான பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா மீண்டும் நினைவுபடுத்தத் தவறியுள்ளது. அதாவது மியான்மாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா அசட்டை செய்துவருகிறது.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னும் சில நாட்களில் தனது முதலாவது ஆண்டு ஆட்சியை நிறைவுசெய்யவுள்ளார். இவர் அதிபராகப் பொறுப்பெடுக்கும் போது வழங்கிய சில வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாது உள்ளன.

இப்பத்தியில் மிக அண்மையில் போர்க் குற்றங்களைக் கையாள்வதற்கான சிறப்பு நீதிமன்றம் ஒன்று சிறிலங்காவில் உருவாக்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டது.

சிறிலங்கா தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு போர்க்கால மீறல்கள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக இதயசுத்தியுடன் செயற்படும் என எதிர்பார்க்க முடியுமா?

இதற்கப்பால், சிறிசேன அரசாங்கமானது தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இன்னமும் தீர்வு காணாததானது இங்கு சிக்கலுக்குரிய ஒன்றாகக் காணப்படுகிறது.

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது தான் வாக்களித்தவாறு சில சாதாரண விவகாரங்களைக் கூட முன்னுரிமைப்படுத்தி அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு விருப்பங் காண்பிக்காத இந்தச் சூழலில், மிகவும் சிக்கலான விடயங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புவது நியாயமானதா?

இந்நிலையில் சிறிலங்காவிடமிருந்து அமெரிக்கா பொறுப்புக்கூறல், சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்கம் போன்றன தொடர்பில் கருத்துக்களை மட்டும் தொடர்ச்சியாகக் கூறுவதானது பயனற்றதாகும். ஆகவே இதற்குப் பதிலாக அமெரிக்க அரசாங்கமானது சிறிலங்கா தொடர்பில் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

சிறிசேனவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலானது தொடர்ந்தும் எவ்வித முன்னேற்றமும் இன்றியுள்ள இத்தருணத்தில், ஒபாமா அரசாங்கமானது சிறிலங்கா தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க விரும்புகிறதா?

இது தொடர்பில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் போதுமானதாக உள்ளதாக அமெரிக்கா ஏற்கனவே தீர்மானித்துவிட்டதா?

இவ்வாறானதொரு தீர்மானத்தை ஏற்கனவே அமெரிக்கா எடுக்காது விட்டால், அடுத்த 12 மாதங்களும் சிறிலங்கா மீது அழுத்தங்களை இடுவதற்கு ஒபாமா அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?

சிறிலங்காவில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் கடந்த காலத் தவறுகள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகமானது இது வரையில் மிகப் பாரிய அழுத்தங்களை சிறிலங்கா மீது  கொடுத்துள்ளது உண்மையாகும்.

முன்னைய அரசாங்கமான மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு சிறிலங்கா தலைசாய்க்கவில்லை. ராஜபக்ச அரசாங்கமானது எப்போதும் அனைத்துலக சமூகத்தை சமாதானப்படுத்துவதற்கான நடவடிக்கையை மட்டுமே முன்னெடுத்தது.

தற்போது, சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பை சிறிசேன பெற்றுக்கொண்டுள்ளார். ஆகவே சிறிலங்காவின் தேசிய அரசாங்கமானது தற்போது அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பெரும் அரசியற் கட்சிகள் தற்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன.

சிறிலங்காவை ஆட்சி செய்யும் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் உறவைப் பலப்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த அரசாங்கத்திற்கு சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்யக் கூடிய ஒரு மனநிலையை அமெரிக்கா கொண்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மாரின் ‘திறந்த ஜனநாயகம்’ தொடர்பில் ஏற்பட்ட கசப்பான பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா மீண்டும் நினைவுபடுத்தத் தவறியுள்ளது.

அதாவது மியான்மாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா அசட்டை செய்துவருகிறது. ஆகவே நிலையான சீர்திருத்தமானது முதன்முதலில் பார்க்கும் போது தோன்றுவதை விட மிகவும் சிக்கலானதும் கடினமானதுமான ஒன்றாகவே எப்போதும் காணப்படுகிறது என்பதே ஆழமான உண்மையாகும்.

இன்னும் ஒரு ஆண்டில் ஒபாமா நிர்வாகம் ஆட்சியிலிருந்து வெளியேறிவிடும்.

அடுத்த 12 மாதங்களில் சிறிசேன அரசாங்கம் நேர்வழியில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட, கலப்பு நீதிமன்ற முறைமை உட்பட பல்வேறு சிக்கலான சீர்திருத்த நிகழ்ச்சிகள் 2017 ஜனவரிக்குள் முற்றாக நிறைவேற்றப்பட முடியாது. இதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படும்.

ஆகவே 2012-2014 காலப்பகுதியில் ஒபாமா நிர்வாகத்தால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போன்று இனி வரப்போகும் அமெரிக்காவின் குடியரசுக்கட்சி அரசாங்கமோ அல்லது ஜனநாயக அரசாங்கமோ சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மேலும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளும் என்பதற்கான எந்தவித உத்தரவாதமும் இங்கு இல்லை என்பதே உண்மை.

ஒபாமாவின் தெளிவான நிர்வாகம் சார்ந்த கரிசனைகளுக்கு அப்பால், இனிவரப் போகும் அமெரிக்க அரசாங்கமானது தற்போதைய அரசாங்கம் போன்றே தன்னுடன் உள்ள நெருக்கமான உறவை மாற்றாது என கொழும்பின் அரசியற் தலைமை புரிந்து கொண்டுள்ளது.

அமெரிக்க-சிறிலங்கா உறவு மாற்றமுற்றால், ஹிலாரி கிளின்ரனின் நிர்வாகமானது உண்மையில் கொழும்பின் மீது பாரிய அழுத்தங்களை இட விரும்புமா?

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியிலுள்ள பெரும்பாலான முன்னணி அரசியற் தலைவர்கள் தமது நாட்டின் வெளிவிவகாரங்கள் தொடர்பாக மிகக் குறைந்த அறிவையே கொண்டுள்ளனர்.

ஆகவே இத்தலைவர்களில் எவராவது இந்திய மாக்கடலில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவான சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை தமது ஆட்சிக்காலத்தில் முன்னுரிமைப்படுத்த விரும்புவார்களா?

2016ல் வெள்ளை மாளிகையின் ஆட்சியை எந்தக் கட்சி கைப்பற்றினாலும் , சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல்கள் தொடர்பில், ஒபாமா நிர்வாகம் காண்பித்தளவு அதேயளவு அக்கறையை, அடுத்து வரும் அமெரிக்க அரசாங்கம் காண்பிக்காது என்றே எதிர்வு கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *