மேலும்

தாய்த் தமிழக உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுவோம் – சிவராம் ஞாபகார்த்த மன்றம்

chennai rainஇன்று தாய்த் தமிழக உறவுகள் துயரத்தில் இருக்கும் போது நாம் நேசக்கரம் நீட்டத் தவறுவோமேயானால் பிரித்தாளும் தந்திரத்தை உபயோகித்து எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிட முயலலாம்.  அதற்கு இடங்கொடாது எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் இணைப்பாளர் சண் தவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

தாய்த் தமிழகத்தின் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ள தீவிர பருவமழைத் தாக்கம் புலம்பெயர் தமிழ் மக்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது.

இயற்கையின் சீற்றம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பழிவாங்குகின்றதோ என நினைக்கத் தோன்றும் வகையில் நிலைமைகள் உள்ளன.

யுத்தப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஆறு ஆண்டுகளாகப் போராடி வரும் தாயக மக்கள் இயற்கைச் சீற்றம் காரணமாக மற்றொரு ‘போர்முனை”யைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. தாய்த் தமிழக உறவுகளின் நிலையோ கண்ணில் நீரை வரவழைப்பதாக உள்ளது. தொலைக்காட்சிகள் மூலம் காணக்கிடைக்கும் காட்சிகள் மனதை உருக்குகின்றன.

ஈழத் தமிழருக்குத் துயரம் நேரும் போதெல்லாம் நேசக்கரம் நீட்டும் தாய்த் தமிழக மக்கள், எமது துயரத்தைத் தமது துயரமாக நினைத்து உயிரையே துச்சமென நினைத்துப் போராடும் மக்கள் இயற்கையோடு மல்லுக்கட்டி நிற்கும்போது எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியம் அல்லவா?

வல்லரசு நாடான இந்தியாவிற்கு வெளியில் இருந்து உதவியோ, நிவாரணமோ செல்ல வேண்டிய தேவை இல்லை. ஆனாலும், தொப்புள் கொடி உறவுகளான நாம் சொந்தச் சகோதரர்களின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டாமா? இந்த வேளையில், ‘காலத்தால் செய்த உதவி ஞாலத்தில் மாணப் பெரிது” என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஒப்ப காலத்தால் உதவி செய்ய ஒவ்வொரு புலம்பெயர் பொது அமைப்புக்களும், இயலுமான தனிநபர்களும் முன்வர வேண்டும் என சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் கேட்டுக் கொள்கிறது.

அதேவேளை, அரச இயந்திரம் செயற்படும் வரை காத்திராது தாமாகவே முன்வந்து மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்ட பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தனி நபர்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களும் தாய்த் தமிழகத் தமிழர்களும் அரசியல் ரீதியாக ஒன்றுபடுவதை பல சக்திகள் பன்னெடுங் காலமாகவே எதிர்த்து வருவதை அனைவரும் அறிவோம். இன்று தாய்த் தமிழக உறவுகள் துயரத்தில் இருக்கும் போது நாம் நேசக்கரம் நீட்டத் தவறுவோமேயானால் அத்தகைய சக்திகள் பிரித்தாளும் தந்திரத்தை உபயோகித்து எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிட முயலலாம்.

எனவே, அதற்கு இடங்கொடாது எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தக் கொள்ள வேண்டும் என அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *