மற்றொரு அமெரிக்க உயர்அதிகாரி அடுத்த வாரம் சிறிலங்கா வருகிறார்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகரான தூதுவர் தோமஸ் சானொன் சிறிலங்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 14ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவருடன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர் மான்பிரீத் சிங் ஆனந்தும், சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
சிறிலங்காவுக்கான இந்தப் பயணத்தின் போது, மூத்த அரசாங்க மற்றும் நாடாளுமன்றத் தலைவர்கள், வர்த்தக மற்றும் சிவில் சமூகத் தலைவர்களை, தூதுவர் தோமஸ் சானொன் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் யுஎஸ் எயிட் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் திட்டங்களையும் அவர் நேரில் பார்வையிடவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கான அமெரிக்காவின் ஆதரவை தூதுவர் தோமஸ் சானொன் மீண்டும் உறுதிப்படுத்துவார்.
அத்துடன், அபிவிருத்தி, பாதுகாப்பு. பொருளாதார வளர்ச்சி, மற்றும் பிராந்திய தொடர்பு விடயங்களில், பரந்து பட்ட ஒத்துழைப்பையும் இவர் வெளிப்படுத்துவார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட ஒரு சில வாரங்களுக்குள், இவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
தூதுவர் தோமஸ் சானொன், இராஜாங்கச் செயலரின் தலைமை அதிகாரியாகவும், அவருக்கு சிறப்பு ஆலோசனை வழங்கும் ஆலோசகராகவும் பதவி வகிக்கிறார்.
வெளிவிகாரக் கொள்கை சார்ந்த பிரதான பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளை இவரே வழங்கி வருகிறார்.
அத்துடன் அனைத்துலக மட்டத்திலான சிறப்பு இணக்கப் பேச்சுக்கள், கலந்துரையாடல்கள், மற்றும் காலத்துக்குக் காலம் இராஜாங்கச் செயலரின் சார்பில் சிறப்பு பணிகளையும் ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.